Published : 03 Oct 2023 11:25 AM
Last Updated : 03 Oct 2023 11:25 AM

25 கிராம ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்: ஜல்ஜீவன் திட்டத்தில் சாதித்த திண்டுக்கல்

ஆத்தூர் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட குழாய் இணைப்பில் குடிநீர் பிடிக்கும் பெண்.

திண்டுக்கல்: கிராம ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் ( ஜல் ஜீவன் ) திட்டத்தின் கீழ் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 25 கிராம ஊராட்சிகள் சாதனை படைத்துள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு திட்டம் ( ஜல்ஜீவன் மிஷன் திட்டம் ) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு தரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 100 சதவீத பணிகளை 25 கிராம ஊராட்சிகள் முடித்துள்ளன.

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஆத்தூர், பிள்ளையார்நத்தம், தேவரப்பன்பட்டி, அக்கரைப்பட்டி, பாளையங்கோட்டை, வக்கம்பட்டி கிராம ஊராட்சிகள், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் அணைப்பட்டி ஊராட்சி, நிலக்கோட்டை ஒன்றியம் குள்ளிசெட்டிபட்டி, விளாம்பட்டி, எஸ்.மேட்டுப்பட்டி, பழநி ஒன்றியம் தாமரைக்குளம், சாணார்பட்டி ஒன்றியம் கோம்பைப்பட்டி,

மருநூத்து, கணவாய்ப்பட்டி, மடூர், தொப்பம்பட்டி ஒன்றியம் மானூர், அக்கரைப்பட்டி, ராஜம்பட்டி, புளியம்பட்டி, குஜிலியம் பாறை ஒன்றியம் ஆர்.புதுக்கோட்டை, நத்தம் ஒன்றியம் முளையூர், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் மாங்கரை, ஒட்டன்சத்திரம் ஒன்றியம் குத்திலிப்பை, வலையபட்டி, வேலூர் அன்னப்பட்டி ஆகிய கிராம ஊராட்சிகள் 100 சதவீத பணி களை முழுமையாக முடித்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகளை வழங்கியுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் திட்டத்தை முழுமையாகச் செயல் படுத்திய கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப் படுகின்றன. ஆத்தூர் ஊராட்சியில் மொத்தம் 2761 வீடுகள் உள்ளன. அனைத்து வீடுகளுக்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு விட்டன. அதிகபட்சமாக தேவரப்பன்பட்டி கிராமத்தில் 2954 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுவிட்டன.

இது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.திலகவதி கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளில் மொத்தம் 4.75 லட்சம் வீடுகள் உள்ளன. இதில் அனைத்து வீடுகளுக்கும் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுவரை 65 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன. குடிநீர் ஆதாரம், விநியோகம், குடிநீரின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் திட்டத்தை முழு மையாகச் செயல்படுத்திய ஊராட்சிகளாகத் தேர்வு செய்யப்படுகின்றன. இந்த ஆண்டுக்குள் அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள வீடு களில் குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகளும் முடிக்கப்பட்டு விடும் என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x