Published : 03 Oct 2023 06:23 AM
Last Updated : 03 Oct 2023 06:23 AM
மதுரை: மதுரை மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பிரசவத்துக்காக பரிந்துரைத்த கர்ப்பிணிகள், அரசு மருத்துவமனையில் அடிக்கடி உயிரிழப்பதாக சர்ச்சை எழுந்தது. மேலும், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் முறையான சிகிச்சை வழங்காமல், அவசரகதியில் பரிந்துரைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், மாநகராட்சி நகர் நல அலுவலர் வினோத்துக்கு அனுப்பிய புகாரில், “இறந்த கர்ப்பிணிகளின் வழக்கு விவரக் குறிப்புகளில் (Case sheet) அரசு மருத்துவர்கள் அடித்தல், திருத்தல் செய்துள்ளனர். உயர் சிகிச்சைக்குப் பரிந்துரைத்த கர்ப்பிணிகளுக்கு, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காததால்தான் அடுத்தடுத்து உயிரிழக்கின்றனர்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.
செப். 29-ல் மஸ்தான்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து, மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட கர்ப்பிணி உயிரிழக்கவே, மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு டெங்கு எனக் குறிப்பிட்டு, அதற்கான மருத்துவ அறிக்கையை தயார் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, நகர்நல அலுவலர் வினோத் அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டுக்கு சென்று, இறந்த கர்ப்பிணிக்கு அளித்த சிகிச்சை விவரங்களை விசாரித்தார். ரத்த மாதிரி முடிவில், அவருக்கு டெங்கு பாதிப்புக்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது.
இதனால் அதிருப்தியடைந்த நகர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் முறையிட்டார். இதை ஓர் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்லவே, அவரது உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட கர்ப்பிணி மரணத்தை ஆட்சியர் சிறப்புத் தணிக்கை செய்தார். அப்போது, ஏற்கெனவே இரு கர்ப்பிணி மரணங்களிலும், வழக்கு விவரக் குறிப்பில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் திருத்தம் செய்தது ஆட்சியருக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து, ஆட்சியர் சங்கீதா, மருத்துவமனை டீன் ரத்தினவேலுவை அணுகி, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். ஆனால், விசாரணை மட்டும் நடத்திய டீன், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆட்சியர் சங்கீதா, சுகாதாரத் துறைச் செயலர் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டுசென்றார்.
சுகாதாரத் துறைச் செயலர் அறிவுறுத்தலில், கூடுதல் மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்தாராம், சுகாதாரத் துறை அதிகாரிகள் நிர்மல்சன், பழனிக்குமார் நேற்று மதுரைக்கு வந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனை மகப்பேறுப் பிரிவு மருத்துவர்கள், ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவர்கள் மற்றும் மாநகராட்சி நகர் அலுவல அலுவலர் வினோத், டீன் ரத்தினவேலு ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இன்று முதல் போராட்டம்: அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் செந்தில் கூறும்போது, “மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத், சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டுள்ளார். அவரைப் பணிநீக்கம் செய்யவேண்டும். எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, நோயாளிகள் பாதிக்காதவாறு இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT