Published : 03 Oct 2023 06:10 AM
Last Updated : 03 Oct 2023 06:10 AM

மக்கள்தொகைக்கு ஏற்ப மருத்துவ இடங்களை நிர்ணயிக்கும் தேசிய மருத்துவ ஆணைய நிபந்தனையை திரும்ப பெற வேண்டும்: ஓபிஎஸ்

சென்னை: மக்கள்தொகைக்கு ஏற்ப மருத்துவஇடங்களை நிர்ணயிக்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் நிபந்தனைகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டில் 2023-2024-ம் கல்வியாண்டுக்குப் பிறகு, புதிதாக மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி அளிக்கும்போது, 50, 100, 150 என்ற எண்ணிக்கையில்தான் அனுமதி அளிக்கப்படும் என்றும்,150 இருக்கைகளுக்கு மேல் அனுமதி அளிக்கப்படாது என்றும்,10 லட்சம் மக்களுக்கு 100 மருத்துவ இருக்கைகள் என்ற குறியீட்டை மருத்துவக் கல்லூரிகள் பின்பற்ற வேண்டும் என்றும் தேசியமருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலேயே அதிக மருத்துவ இருக்கைகள் கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான். தமிழ்நாட்டில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள், 35 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகள் என 72 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

இந்தக் கல்லூரிகள் மூலம்ஆண்டுக்கு 11,600 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். எனினும், அனைத்துத் தரப்புமக்களுக்கும் தரமான மருத்துவச் சேவை கிடைக்க வேண்டுமென்றால் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.

100 இருக்கைகள்... இந்த சூழ்நிலையில், 10 லட்சம் பேருக்கு 100 இருக்கைகள் என்ற விகிதாச்சாரம் பின்பற்றப்பட வேண்டுமென்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இது தென் மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

தற்போதைய நிலையில், தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை சுமார் 8 கோடி. தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய அறிவிக்கையின்படி 8 ஆயிரம் மருத்துவ இருக்கைகள்தான் இருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் கூடுதலாக 3,600 மருத்துவ இடங்கள் உள்ளன. இவ்வாறு கூடுதலாக மருத்துவ இடங்கள் இருப்பதற்குக் காரணம், அதிமுக ஆட்சியில் அதிகமாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதும், மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தியதும்தான்.

எனவே, 10 லட்சம் மக்களுக்கு 100 மருத்துவ இருக்கைகள் என்ற நிபந்தனையை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்ய வேண்டும். இதற்குத் தேவையான அழுத்தத்தை மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x