Published : 02 Oct 2023 05:25 AM
Last Updated : 02 Oct 2023 05:25 AM

பேச்சுவார்த்தை தோல்வி: இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கவனஈர்ப்பு காத்திருப்பு போராட்டம் சென்னை நுங்கம்பாக்கம், டிபிஐ வளாகத்தில் நடந்து வருகிறது, இதில் பங்கேற்ற பகுதிநேர ஆசிரியர்கள்.படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: ஊதிய முரண்பாட்டை களையக்கோரி தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் தமிழக அரசு நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அரசு முன்வைத்த கூடுதல் கால அவகாசத்தை ஏற்க ஆசிரியர்கள் மறுத்துவிட்டனர். இதனால் அவர்களின் போராட்டம் 4-வது நாளாக நேற்றும் நீடித்தது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 31.5.2009 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், 1.6.2009-க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய வேறுபாடு உள்ளது. இதை களையக்கோரி செப்டம்பர் 28 முதல் சென்னை டிபிஐ வளாகத்தில் குடும்பத்துடன் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.

இவர்களில் பலர் மயக்கமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே, வெள்ளிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் நேற்று மதியம் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதில் மாநில பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் மற்றும் நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, நிதித்துறை கூடுதல் செயலாளர் ஜி.கே. அருண் சுந்தர் தயாளன், பள்ளிக்கல்வி இயக்குநர் ஜி.அறிவொளி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதுகுறித்து சங்க பொதுச் செயலாளர் ராபர்ட் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘எங்கள் கோரிக்கையை முதல்வர் கவனத்துக்கு கொண்டுசெல்ல கோரியுள்ளோம். எந்த தேதியில் இருந்து அமல்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.

பகுதிநேர சிறப்பாசிரியர்கள்: இதற்கிடையே, பணிநிரந்தரம் கோரி தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் பகுதிநேர சிறப்பாசிரியர்களும், பணி முன்னுரிமை, பதிவுமூப்பு அடிப்படையில் பணிநியமனம், ‘டெட்’ தேர்ச்சி பெற்றோருக்கு மீண்டும் ஒரு போட்டித்தேர்வு நடத்தக்கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 2013-ல் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களும் டிபிஐ வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x