Published : 02 Oct 2023 04:06 AM
Last Updated : 02 Oct 2023 04:06 AM
திருநெல்வேலி /தென்காசி / நாகர்கோவில்: தென்மேற்கு பருவமழைக் காலம் முடிவு க்கு வந்துள்ள நிலையில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் பரவலாக பலத்த மழை பெய்தது. நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 105 மி.மீ. மழை பதிவானது.
நாலுமுக்கு பகுதியில் 90 மி.மீ., காக்காச்சி பகுதியில் 60., மாஞ்சோலையில் 47, பாபநாசத்தில் 26, கொடுமுடியாறு அணையில் 21, சேர்வலாறு, ராதாபுரத்தில் தலா 15 , மணிமுத்தாறு, களக்காட்டில் தலா 11.20, அம்பாசமுத்திரத்தில் 7, நாங்குநேரியில் 3, சேரன்மகாதேவியில் 2.80 மி.மீ. மழை பதிவானது. தொடர் மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடியும், சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே 17 அடியும் உயர்ந்தது.
தென்காசி மாவட்டம்: இதேபோல் தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணையில் 78.40 மி.மீ., செங்கோட்டையில் 40.80, அடவிநயினார் அணையில் 32, ஆய்க்குடியில் 26, தென்காசியில் 20, கடனாநதி அணையில் 12, கருப்பாநதி அணையில் 9, ராமநதி அணையில் 7, சிவகிரியில் 2 மி.மீ. மழை பதிவானது.
கடனாநதி அணை நீர்மட்டம் இரண்டேமுக்கால் அடியும், ராமநதி அணை நீர்மட்டம் 2 அடியும், அடவிநயினார் அணை நீர்மட்டம் நான்கரை அடியும் உயர்ந்தது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. விடுமுறை தினமான நேற்று சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்தனர்.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அணை பகுதிகளிலும், நீர்பிடிப்பு பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை தொடர்ச்சியாக பெய்வதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதுவரை 500-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
பேச்சிப் பாறை அணையின் நீர்மட்டம் நேற்று 25 அடியாக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 2,409 கன அடி தண்ணீர் வரும் நிலையில் 330 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47.40 அடியாக இருந்தது. அணைக்கு 1820 கன அடி தண்ணீர் வருகிறது. சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 12.36 அடியாக உள்ளது. அணைக்கு 284 கன அடி தண்ணீர் வருகிறது.
200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 12.46 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 9.30 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 4.92 அடியாகவும், முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ் 19.50 அடியாகவும் உள்ளது. அதிகபட்சமாக களியலில் 70 மிமீ., மழை பெய்தது.
பேச்சிப்பாறை 67, பெருஞ்சாணி 50, சிற்றாறு ஒன்று 40, சிற்றாறு இரண்டு 26, பூதப்பாண்டி 32, கன்னிமார் 42., கொட்டாரம் 28, குழித்துறை 44, மயிலாடி 36, நாகர்கோவில் 24, புத்தன் அணை 48, சுருளோடு 48, தக்கலை 37, குளச்சல் 34.6, இரணியல் 33, பாலமோர் 68.4, மாம்பழத்துறையாறு 35, திற்பரப்பு 47, ஆரல்வாய்மொழி 24, கோழிபோர்விளை 52, அடையாமடை 61, குருந்தன்கோடு 14, முள்ளங்கினாவிளை 41, ஆணைக்கிடங்கு 32, முக்கடலில் 39 மிமீ., மழை பதிவானது.
போக்குவரத்து துண்டிப்பு: தொடர் மழையால் குமரி மலைகிராமங் களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதுடன் தரைப்பாலங்கள் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கோதையாறு, கிழவியாறு, மயிலாறு, குற்றியாறு, கல்லாறு போன்ற பகுதிகளில் ஆற்றுநீருடன் மழைநீர் கலந்து பாய்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மோதிரமலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மோதிரமலையில் இருந்து குற்றியாறு செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதனால் இரு புறமும் உள்ள மலைகிராமங்களுக்கு நேற்று முன்தினம் முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, களியல், வேலிப்பிலாம், கோலிஞ்சிமடம் மற்றும் சுற்றுப்புற மலை கிராம பாதைகளில் மழையால் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைக்கு கிராம, நகர பகுதிகளுக்கு வருவதற்கு போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT