Published : 15 Dec 2017 03:26 PM
Last Updated : 15 Dec 2017 03:26 PM

ஆர்.கே.நகர் காவல் ஆய்வாளர்களை மாற்றினால் போதாது; உயர் அதிகாரிகளையும் மாற்ற வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அங்குள்ள ஆய்வாளரை மட்டும் மாற்றினால் போதாது, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் 11 காவல் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று தான் அளித்த மனுவில் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டு மீண்டும் டிச.21 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் சட்டத்துறை செயலரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் மனு அளித்திருந்தார். அதில், தேர்தல் பிரச்சாரத்தில் ஆளுங்கட்சி பணப் பட்டுவாடாவில் ஈடுபடுவதாகவும் போலீஸார் அதன்மீது நடவடிக்கை எடுக்காமல் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதால் காவல் அதிகாரிகளை மாற்றவேண்டும்.

ஆர்.கே.நகர் பணியில் உள்ள இணை ஆணையர் வடக்கு சுதாகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை மாற்றினால் தேர்தல் முறையாக நடக்கும், குற்றச்செயல்கள் நடக்கும் போது போலீஸார் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். பறக்கும் படையினர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியபோதும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை, இவை எல்லாம் உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை ஆகவே கீழ்கண்ட அலுவலர்களை மாற்றினால் மட்டுமே முறையாக தேர்தல் நடக்கும் என்று தெரிவித்திருந்தார்.

அவரது பட்டியலில் இணை ஆணையர் சுதாகர், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் செஷாங் சாய், கொருக்குப்பேட்டை உதவி ஆணையர் சிராஜுத்தீன், ராயபுரம் உதவி ஆணையர் தனவேல், வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் ரகுராம், ஆய்வாளர்கள் வண்ணாரப்பேட்டை பழனி, ஆர்.கே.நகர் ஜெயராஜ், தண்டையார்பேட்டை ரவீந்திரன், கொருக்குப்பேட்டை சம்பத், காசிமேடு சிதம்பர பாரதி, காசிமேடு மீன்பிடி துறைமுகம் சாம்வின்சண்ட் உள்ளிட்ட 11 பேரை மாற்ற வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ஆர்.கே.நகர் மற்றும் காசிமேடு ஆய்வாளர்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதியிடம் 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் கேட்டபோது:

நேற்று 11 காவல் அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தீர்கள், இன்று ஆய்வாளர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளாரே?

''எங்கள் கோரிக்கை அங்கு பாதுகாப்புப் பணியில் உள்ள உயர் அதிகாரிகள் உட்பட 11 பேரை மாற்ற வேண்டும் என்று நாங்கள் புகார் அளித்துள்ளோம். அந்தப் பட்டியலில் இருக்கும் 11 பேரையும் மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்'' என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x