Published : 01 Oct 2023 03:48 PM
Last Updated : 01 Oct 2023 03:48 PM
சென்னை: 1971-ம் ஆண்டு நிகழ்ந்த இந்திய - பாகிஸ்தான் போரின் வீரக் கதையை எடுத்துச் சொல்லும் வகையில், 'ஆபரேஷன் விஜய் - 1971’ நாடக உருவாக்க நிகழ்வு நடைபெற்றது. இதனை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைத்தார்.
சென்னை வேளச்சேரியில் 'ஆபரேஷன் விஜய் - 1971’நாடக உருவாக்க நிகழ்வை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவங்கி வைத்தார். சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில், வரலாற்று முக்கியத்துவம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த நிகழ்ச்சியாக 'ஆபரேஷன் விஜய் - 1971’ என்ற நாடக உருவாக்கம் நிகழ்வை என்சிசி உடான் அமைப்பு நடத்தியது. NCC UDAAN என்பது தேசிய மாணவர் படையின் ஒன்றுபட்ட, முன்னாள் மாணவர் சங்கத்தின் ஓர் அமைப்பாகும். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு நிகழ்வை துவங்கி வைத்து, போரில் கலந்து கொண்ட நபர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வு 1971-ம் ஆண்டு நிகழ்ந்த இந்திய - பாகிஸ்தான் போரின் வீரக் கதையை குறிப்பிடுகிறது. இந்திய ராணுவத்தின் வெற்றி குறித்து அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்லும் ஒருகதையை உருவாக்கி அதை மீண்டும் நாடகமாக காட்சிப்படுத்துவதன் மூலமாக தேசபக்தி, ஒற்றுமை உணர்வை வலுப்படுத்துவதையே, இந்த நிகழ்வு நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த நாடக உருவாக்கம், இந்திய-பாகிஸ்தான் போரின்போது நமது ஆயுதப் படைகளின் வீரம், தியாகத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், ஆயுதப் படைகள், துணை ராணுவ அமைப்பின் அதிகாரிகள், மாநில நிர்வாகத்தின் தலைவர்கள், தமிழ்நாடு காவல்துறையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT