Published : 01 Oct 2023 01:18 PM
Last Updated : 01 Oct 2023 01:18 PM
ராமேசுவரம்: அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் ராமேசுவரம் அருகே பாம்பனில் 70 அடி ‘பாரத் ஜோடோ யாத்ரா’ நினைவு கம்பம் நிறுவப்பட்டது. அதில் கட்சியின் கொடியை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஏற்றி வைத்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2022-ம் ஆண்டு கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் நடை பயணத்தை மேற்கொண்டார். இந்த நடை பயணத்தின் ஓராண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் பாம்பனில் உள்ள காங்கிரஸ் பவனில் 70 அடி உயர கொடிக் கம்பம் நிறுவப்பட்டது.
அதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கட்சிக் கொடியேற்றினார். இந்நிகழ்ச்சிக்கு அகில இந்திய மீனவர் காங்கிரஸின் தேசியத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமை வகித்தார். காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, மாவட்ட காங்கிரஸ் பொறுப்பு குழு தலைவர் மலேசியா எஸ்.பாண்டி, திருவாடானை எம்எல்ஏ கருமாணிக்கம், காரைக் குடி எம்எல்ஏ மாங்குடி, முன்னாள் மாவட்டத் தலைவர் செல்லத்துரை அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் பேசுகையில், "ஒற்றுமை பயணம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. இதைக் கொண்டாடும் விதமாக 70 அடி உயர கொடிமரத்தை நிறுவிய ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோவை பாராட்டுகிறேன். இது தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய காங்கிரஸ் கட்சிக் கொடி மரமாகும்" என்று பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT