Published : 01 Oct 2023 01:01 PM
Last Updated : 01 Oct 2023 01:01 PM
குன்னூர்: "குன்னூர் சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
குன்னூரில் சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்து, குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருபவர்களைச் சந்தித்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "குன்னூர் சுற்றுலாப் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைப் பெற்று வரும் இந்த மருத்துவமனையில், சிகிச்சையளிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. மேலும், இந்த மருத்துவமனையில் 14க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினர், மீட்டெடுக்கப்பட்ட 32 காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையை, சரியான நேரத்தில் அளித்துள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். இந்த விபத்தில், ஒரு 15 பேர் மிகச்சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டு அருகில் இருக்கும் ஒரு முகாமில், மாவட்ட நிர்வாகத்தால் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மல்ட்டி பிராக்சர் உள்ளிட்ட காரணத்தால், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காலையில், கோவை மருத்துவக் கல்லூரி டீனிடம் அந்த இருவர் குறித்த தகவல்களைக் கேட்டேன். அதில் ஒருவர் மட்டும் அதிகப்படியான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதாகவும், ஒருவர் நன்றாக இருப்பதாகவும் கூறப்பட்டது. தொடர்ந்து இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இருவர் ஊட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நாங்கள் அங்கும், கோவைக்கும் சென்று பார்வையிட உள்ளோம். முதல்வரின் வழிகாட்டுதலின்படி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக தலா ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த தொகை, உயிரிழந்தவர்களின் சட்டப்பூர்வமான வாரிசுகளுக்கு அவர்களுடைய சொந்த ஊரிலேயே வழங்கப்படவுள்ளது.
காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், சிறு காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தொகையை அமைச்சர் ராமச்சந்திரனும், மாவட்ட நிர்வாகத்தினரும் வழங்கி உள்ளனர். குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் 32 பேரும் நலமுடன் உள்ளனர். முழுமையாக நலம் பெற்றவுடன், மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், அவர்களுடைய சொந்த ஊரான கடையத்துக்கு திருப்பி அனுப்பிவைக்கப்படுவர்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT