Published : 01 Oct 2023 12:26 PM
Last Updated : 01 Oct 2023 12:26 PM
கோவை: கோவை மாநகரில் விபத்துகளை தவிர்க்கவும், வாகனங்கள் சீரான வேகத்தில் செல்லவும் பள்ளி, கல்லூரிகள் முன்பு, வணிக நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதி மற்றும் முக்கிய சந்திப்புகளில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் வேகத் தடைகள் அமைக்கப்படுகின்றன.
மாநகரில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வேகத் தடைகள் உள்ளன. மாநகராட்சியின் அனுமதியை பெறாமல் தனியார் சார்பிலும் பல்வேறு இடங்களில் வேகத் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் விதிகளை மீறி அதிக உயரத்திலும், அடையாளப் படுத்தப்படாமலும் உள்ள வேகத் தடைகளால் விபத்துகள் ஏற்படுவதோடு,
உயிரிழப்பு சம்பவங்களும் நடக்கின்றன. பீளமேட்டில் நேற்று முன்தினம் இரவு முறையற்று அமைக்கப்பட்டிருந்த வேகத் தடையில் பைக்கில் சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, சமூக செயல்பாட்டாளரான ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த ராஜ்குமார் கூறும்போது,‘‘வேகத் தடைகள் எவ்வளவு உயரம், அகலத்தில் இருக்க வேண்டும், அடையாளப்படுத்த வேண்டும்என இந்திய சாலைக் குழு வரையறுத்துள்ளது. ஆனால், மாநகரின் பல்வேறு இடங்களில் வெவ்வேறு உயர, அகலத்திலும், அடையாளங்கள் இல்லாமலும் வேகத் தடைகள்அமைக்கப்பட்டுள்ளன.
ஆவாரம்பாளையம், சவுரி பாளையம், பீளமேடு, மகாத்மா காந்தி சாலை, பால சுந்தரம் சாலை, உக்கடம், சிங்காநல்லூர், செளரிபாளையம், வின்சென்ட் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களை குறிப்பிடலாம். நிர்ணயிக்கப்பட்ட உயரத்தை தாண்டி அமைப்பதாலும், ஒளிரும் பட்டையோ, வெள்ளை நிற வண்ணமோ இல்லாமல் அமைக்கப் படுவதாலும் வாகன ஓட்டுநர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
குறிப்பாக, இரவு நேரங்களில் வேகத் தடை விபத்துகள் அதிகளவில் நடக்கின்றன. இதனை தடுக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சில மாதங்களுக்கு முன்னர் மாநகராட்சி சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு வேகத்தடைகள் சரி செய்யப்பட்டன. ஆனால், அது முழுமையாக மேற்கொள்ளப் படவில்லை. விதிகளை மீறி தன்னிச்சையாக வேகத்தடைகள் அமைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
மாநில நெடுஞ்சாலைத் துறையின் சாலை பாதுகாப்புப் பிரிவு கோட்டப் பொறியாளர் மனு நீதி கூறும்போது,‘‘ஐ.ஆர்.சி எனப்படும் இந்தியன் ரோட் காங்கிரஸ் விதிகளின் படி தான் வேகத் தடைகள் அமைக்க வேண்டும்.
வாகனங்கள் எவ்வளவு கிமீ வேகத்தில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதோ அதற்கேற்ப வேகத் தடையின் உயரம் அமையும். வேகத் தடைகளை சரியான அளவில் அமைக்க வேண்டும், அடையாளக் குறியீடுகள் ஏற்படுத்த வேண்டும் என சாலை பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரும் அறிவுறுத்தி வருகிறார்’’என்றார்.
ஆணையர் எச்சரிக்கை: கோவை மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) செல்வ சுரபி கூறும்போது,‘‘மாநகரில் வேகத் தடை அமைக்க வேண்டும் என்றால் மாநகராட்சியிடம் தெரிவிக்க வேண்டும். அங்கு வேகத் தடை அமைக்க வேண்டிய சூழல் உள்ளதா என ஆய்வு செய்து, அவசியம் என்றால் அமைக்கப்படும். அதிக உயரத்தில் வேகத் தடை அமைக்கக்கூடாது.
எனவே, பொதுமக்கள், தன்னார்வலர்கள், வணிக நிறுவனத்தினர், பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் தாமாக வேகத் தடையை அமைக்கக்கூடாது. தனியார் எவரேனும் அமைத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக ஆய்வு நடத்தப்படும். தேவையற்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத் தடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
வேகத்தடை அமைக்கப்பட்ட இடங்களில் அடையாளங்கள் ஏற்படுத்தப்படும். கொடிசியா பகுதியில் இளைஞர் உயிரிழந்த இடத்தில் பள்ளி நிர்வாகம்சார்பில் அனுமதி பெறாமல் வேகத்தடைஅமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி நிர்வாகத்தின் மீது பீளமேடு போலீஸிலும் புகார் அளிக்கபட்டுள்ளது’’ என்றார்.
இளைஞர் பரிதாப உயிரிழப்பு கோவை பீளமேடு அருகே, நள்ளிரவில் வேகத் தடையில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விழுந்ததில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். கோவை சேரன் மாநகரில் உள்ள டிபார்ட்மென்டல் ஸ்டோரில் பணியாற்றிவந்த சூலூரைச் சேர்ந்த சந்திர காந்த் (26) என்பவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டார்.
கொடிசியா அருகே தனியார் பள்ளி முன்பு, புதியதாக அமைக்கப்பட்டிருந்த வேகத் தடையை கடந்த போது, இருசக்கர வாகனம் நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்டதில் சந்திர காந்த் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பீளமேடு கிழக்குப் பிரிவு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, விபத்து நடந்த சிறிது நேரத்தில் அங்கு வந்த ரோந்து போலீஸார், வேகத் தடை அருகே பெயிண்டால் வெள்ளைக்கோடு அமைத்தனர்.
மாநகராட்சி அதிகாரிகளும் வந்து விசாரணையில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகத்தின் சார்பில், அனுமதி பெறாமல் தன்னிச்சையாக வேகத் தடை அமைத்தது தெரியவந்தது. இதையடுத்து, வேகத் தடை உடனடியாக இடித்து அகற்றப்பட்டது. விபத்து காட்சி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
இளைஞர் பரிதாப உயிரிழப்பு: கோவை பீளமேடு அருகே, நள்ளிரவில் வேகத் தடையில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்ததில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை சேரன் மாநகரில் உள்ள டிபார்ட்மென்டல் ஸ்டோரில் பணியாற்றி வந்த சூலூரைச் சேர்ந்த சந்திர காந்த் (26) என்பவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டார். கொடிசியா அருகே தனியார் பள்ளி முன்பு, புதியதாக அமைக்கப்பட்டிருந்த வேகத் தடையை கடந்த போது, இருசக்கர வாகனம் நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்டதில் சந்திர காந்த் படுகாயம் அடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பீளமேடு கிழக்குப் பிரிவு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, விபத்து நடந்த சிறிது நேரத்தில் அங்கு வந்த ரோந்து போலீஸார், வேகத் தடை அருகே பெயிண்டால் வெள்ளைக்கோடு அமைத்தனர்.
மாநகராட்சி அதிகாரிகளும் வந்து விசாரணையில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகத்தின் சார்பில், அனுமதி பெறாமல் தன்னிச்சையாக வேகத் தடை அமைத்தது தெரியவந்தது. இதையடுத்து, வேகத் தடை உடனடியாக இடித்து அகற்றப்பட்டது. விபத்து காட்சி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT