Published : 01 Oct 2023 04:31 AM
Last Updated : 01 Oct 2023 04:31 AM
சென்னை: வந்தே பாரத் ரயில் சேவை காரணமாக, சென்னை - மதுரை இடையே இயக்கப்படும் வைகை விரைவு ரயில், மதுரை - கோயம்புத்தூர் சந்திப்புக்கு இயக்கப்படும் விரைவு ரயில் ஆகியவற்றின் பயண நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து மதுரை வழியாக சென்னை எழும்பூருக்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 24-ம் தேதி தொடங்கிவைத்தார்.இந்த ரயில், தென் மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வழித்தடத்தில் செல்லும் மற்ற ரயில்களை காட்டிலும் வந்தே பாரத் ரயில் 3 மணி நேரம் முன்னதாக பயணிக்கும் விதமாக இருப்பதால், பயணிகளிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வந்தே பாரத் ரயில் சேவை காரணமாக, சென்னை- மதுரை இடையே பகலில் இயக்கப்படும் வைகை விரைவு ரயிலின் பயண நேரம் 15 நிமிடம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு பகல் நேரத்தில் அதிவிரைவுடன் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் ரயிலாக வைகை விரைவு ரயில் உள்ளது. கடந்த 46 ஆண்டுகளாக தென்மாவட்ட மக்களின் ரயில் பயணத்தில் வைகை விரைவு ரயில் பேருதவியாக இருக்கிறது.
வந்தே பாரத் ரயிலுக்காக...: இந்த ரயில் மதுரையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 2.25 மணிக்கு அதாவது 7 மணி 15 நிமிடங்களில் சென்னை எழும்பூருக்கு வந்தடைகிறது. மறுமார்க்கமாக, பிற்பகல் 1.50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு அதாவது 7 மணி 25 நிமிடங்களில் மதுரை சென்றடையும். தற்போது, வந்தே பாரத் ரயிலுக்காக, வைகை விரைவு ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
மதுரை- சென்னை எழும்பூருக்கு காலை 7.10 மணிக்கு பதிலாக, காலை 6.40 மணிக்கு புறப்படும். அதாவது, அரை மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, சென்னையில் இருந்து மதுரைக்கு இரவு 9.15 மணிக்கு பதிலாக, 15 நிமிடம் தாமதமாக இரவு 9.30 மணிக்கு சென்றடையும்.
அக்டோபர் 1 முதல் அமல்: இதுபோல, மதுரையில் இருந்து கோயம்புத்தூருக்கு காலை 7.25 மணிக்கு புறப்படும் கோவை விரைவு ரயில் நேரம் மாற்றப்பட்டு, காலை 7 மணிக்கே புறப்பட்டு செல்லும். இதுதவிர, சென்னை எழும்பூர் -கொல்லம் அதிவிரைவு ரயில் சேவைக்காக, மதுரை - சென்னைக்கு இரவு 9.35 மணிக்கு புறப்படும் பாண்டியன் விரைவு ரயில் 15 நிமிடம் முன்னதாக இரவு 9.20 மணிக்கு புறப்படும்.
இந்த நேரம் மாற்றம் இன்று (அக்.1) முதல் அமலுக்கு வரவுள்ளது.
வைகை அதிவிரைவு ரயில், கோவை விரைவு ரயில், பாண்டியன் விரைவு ரயில் ஆகிய ரயில்களின் பயண நேரம் அதிகரித்துள்ளதால், பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து ரயில் பயணிகள் சிலர் கூறுகையில்," வைகை விரைவு ரயிலின் பயண நேரம் படிப்படியாக 7 மணி நேரமாக குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பயண நேரம் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது எங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. உடனடியாக, இந்த நேர மாற்றத்தை திரும்பப் பெற வேண்டும்" என்றனர்.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, "சென்னை- திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி உள்ள நிலையில், அந்த ரயிலின் நேரத்தை பராமரிக்க சில ரயில்களின் நேரம் மாற்றப்படவுள்ளது. அந்தவகையில், வைகை விரைவு ரயில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT