Published : 01 Oct 2023 06:47 AM
Last Updated : 01 Oct 2023 06:47 AM
சென்னை: காந்தி ஜெயந்தி தினமான நாளை தமிழகம் முழுவதும் 12,525 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக உரையாற்றுகிறார்.
இதுதொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்கள் அதிகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த அரசு பொறுப்பேற்றவுடன் கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் 4 கிராம சபை கூட்டங்களை 6 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று உரைத்த காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதி நடைபெற உள்ள கிராமசபை கூட்டங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும்.
பொதுமக்கள் அதிக அளவில் கலந்துகொள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திடும்வகையில் கிராமசபை கூட்ட அழைப்பிதழ் ஒன்று வடிவமைக்கப்பட்டு, ஊராட்சிகளில் இல்லம்தோறும் வழங்கப்பட்டுள்ளது.
அரசின் நலத்திட்டங்கள்: அரசின் மூலம் செயல்படுத்தப்படும் முத்தான திட்டங்களான மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை, பள்ளிகளில் காலை உணவு, புதுமைப் பெண், நான் முதல்வன், கலைஞர் மகளிர் உரிமை ஆகிய திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும் விதமாக திட்ட செயலாக்கம், பயனாளிகள் தேர்வு விவரம், திட்டத்தின் பயன்கள் குறித்த குறும்படங்கள் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காட்சிப்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கிராமசபை கூட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி குறும்பட உரையின் மூலம் தொடங்கி வைத்து, கிராமசபை குறித்த கருத்துகளை தெரிவிக்க உள்ளார். அமைச்சர்கள், தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் கலந்துகொள்வர்.
கிராமசபை கூட்டத்துக்கான உத்தேச பொருட்கள் அடங்கிய வழிகாட்டுதல்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலம் அனைத்துஊராட்சிகளுக்கும் அனுப்பப்பட் டுள்ளன. இதில், பொதுவான விவாதப் பொருளாக, ஊராட்சிகளின் நிதிநிலை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் திட்டம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, பிரதம மந்திரி ஊரககுடியிருப்பு திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதம் நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT