Published : 28 Dec 2017 09:47 AM
Last Updated : 28 Dec 2017 09:47 AM
இந்திய அஞ்சல் துறை சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 37 பேமென்ட் வங்கிகள் திறக்கப்பட உள்ளன. கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள், தங்கள் வீட்டருகே உள்ள அஞ்சல் நிலையத்தின் மூலம் இந்த வங்கி சேவையை பெற முடியும் என தலைமை அஞ்சல் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் நிதிச் சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு வங்கிச் சேவையை விரிவு படுத்தி வருகிறது. அதன்படி, புதிதாக பேமென்ட் வங்கிகளைத் திறக்க முடிவு செய்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி இதற்கான அனுமதியை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது. இந்திய அஞ்சல் துறைக்கும் இந்த பேமெண்ட் வங்கியை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அஞ்சல் துறை சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 37 வங்கி கள் திறக்கப்பட உள்ளன.
இதுகுறித்து, தமிழ்நாடு தலைமை அஞ்சல் துறை தலைவர் எம்.சம்பத் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
நாட்டில் உள்ள குக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்குக்கூட வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக பேமெண்ட் வங்கிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, இந்திய அஞ்சல் துறை சார்பில், ‘இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி’ என்ற பெயரில் புதிய வங்கி கடந்த ஜனவரி 30-ம் தேதி ராஞ்சி மற்றும் ராய்ப்பூர் ஆகிய நகரங்களில் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் 650 பேமென்ட் வங்கி கிளைகளைத் திறக்க இந்திய அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.
இதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 37 பேமென்ட் வங்கிகள் 2018 மார்ச் மாதத்துக்குள் திறக்கப்பட உள்ளன. சென்னை யில் அண்ணாசாலை தலைமை அஞ்சலகம், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், சிதம்பரம், தஞ்சை, கும்பகோணம், தூத்துக்குடி, கோவில்பட்டி , உடையார்பாளையம், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாகர்கோயில், காரைக்கால், கரூர், கிருஷ்ணகிரி, தல்லாகுளம், மயிலாடுதுறை, வெல்லூர், சேரிங் கிராஸ், பெரம்பலூர், புதுச்சேரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தேனி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய ஊர்களில் உள்ள தலைமை அஞ்சல் நிலையங்களில் இந்த வங்கிக் கிளைகள் திறக்கப்பட உள்ளன.
பெமென்ட் வங்கியில் சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு, வைப்புக் கணக்கு ஆகியவற்றை தொடங்கலாம். ஆனால், அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரைதான் டெபாசிட் செய்ய முடியும். மேலும், இந்த வங்கியில் கடன் பெற முடியாது. அதேபோல், கிரெடிட் கார்டும் வழங்கப்பட மாட்டாது. அதேசமயம், பொதுத்துறை வங்கிகளில் அளிக்கப்படும் மற்ற சேவைகள் வழங்கப் படும். கிராமப்புறங்களில் வசிக் கும் மக்கள் பயன்பெறும் வகை யில் அருகேயுள்ள அஞ்சல் நிலையத்தில் சென்று இந்த வங்கியில் கணக்குத் தொடங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்தக் கட்டமாக, சில பொதுத்துறை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களும், இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி மூலம் அந்த வங்கிக் கணக்கில் பரிவர்த்தனை செய்வதற்கான வசதிகள் தொடங்க, பொதுத்துறை வங்கிகளுடன் விரைவில் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT