Published : 01 Oct 2023 06:10 AM
Last Updated : 01 Oct 2023 06:10 AM

குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு: 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதை மரப்பாலம் பகுதியில் நேற்று 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து.

குன்னூர்/கோவை: குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதை பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து 54 பேர் பேருந்து மூலமாக நேற்று முன்தினம் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனர். பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, உதகையில் இருந்து நேற்று மாலை கோவைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே 9-வது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்ற வாகனஓட்டிகள் அளித்த தகவலின்பேரில் தீயணைப்பு, காவல்துறையினர் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, சரக டிஐஜி சரவண சுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பேருந்தில் சிக்கியவர்களை கயிறு கட்டி தீயணைப்புத் துறையினர் மீட்டனர். மீட்கப்பட்டவர்கள் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலமாக குன்னூர், மேட்டுப்பாளையம், கோவை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் சடலங்களும் அடுத்தடுத்து மீட்கப்பட்டன.

நேற்று இரவு 9.15 மணி நிலவரப்படி 8 பேர் உயிரிழந்திருப்பதும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதும் தெரியவந்தது.

முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் நிதின் (15), பேபி கலா (36), முருகேசன் (65), முப்பிடாத்தி (67), கவுசல்யா (29) மற்றும் பெயர் தெரியாத 3 பேர் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்தால், குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஒன்றரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கோவை சரக டிஜஜி சரவணசுந்தர் கூறும்போது, ‘‘குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சுகிறோம். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும்பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.

மேலும், இந்த விபத்து தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டுப்பாட்டு அறை எண் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 1077 மற்றும் 9443763207 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் நிவாரணம்: இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும், விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x