Published : 22 Dec 2017 09:05 AM
Last Updated : 22 Dec 2017 09:05 AM
யானைகள் விளை நிலங்களுக்குள் புகாமல் வெடிச்சத்தம் எழுப்பி தடுத்து விரட்டும் வகையில்,கிருஷ்ணகிரியைச் சேர்ந்த இளைஞர் தயாரித்துள்ள கருவி ஜவளகிரி அருகே வனத்துறையினர் முன்னிலையில் சோதனையிடப்பட்டது.
கர்நாடகா, ஆந்திரா ஆகிய இரு மாநில எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 5.43 லட்சம் ஹெக்டேர். இதில், 1.45 லட்சம் ஹெக்டேர் வனப்பகுதியாகும். கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் 150-க்கும் மேற்பட்ட யானைகள் நிரந்தரமாக தங்கியுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் இருந்து அடிக்கடி கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிக்கு வரும் யானைகள், இங்கு நிரந்தரமாக தங்கியுள்ள யானைகளுடன் சேர்ந்து இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும், யானைகளின் வழித்தடத்தில் குறுக்கிடும் கிராம மக்களை தாக்கிக் கொன்றுவிடுகின்றன.
விளைநிலங்களுக்குள் புகும் யானைகளை வனத்துறையினரும், கிராம மக்களும் பட்டாசுகளை வெடிக்க வைத்து காட்டுக்குள் விரட்டுவது வழக்கம். அவ்வாறு பட்டாசு வெடித்து விரட்டும் போது, வெடிகளை வெடிப்பவர்களுக்கும் காயம் ஏற்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். இந்நிலையில், நிலங்களுக்குள் யானைகள் புகுவதை தடுக்க தானாகவே வெடிச்சத்தம் எழுப்பும் கருவியை காவேரிப்பட்டணம் அருகே உள்ள மாரிசெட்டிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற இளைஞர் தயாரித்துள்ளார். அந்தக் கருவியை வனத்தில் சோதனை செய்து காட்டி, வனத்துறையினரிடம் இருந்து அவர் சான்று பெற்றுள்ளார்.
இதுகுறித்து இளைஞர் சக்திவேல் கூறியதாவது:
யானைகளால் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் பயிர், உயிர் சேதங்களைத் தவிர்க்கும் வகையில் தானாகவே வெடிச்சத்தம் எழுப்பும் கருவியை தயாரித்துள்ளேன். மாவட்ட வன அலுவலரிடம் அனுமதி பெற்று, கடந்த 17-ம் தேதி இரவு தளி வடக்கு பகுதியில் ஜவளகிரி வனத்தை ஒட்டியுள்ள தேவர்பெட்டா கிராமத்தில் நான் தயாரித்துள்ள கருவியை வனத்துறையினருக்கு சோதனை செய்து காட்டினேன்.
ஒரு புறத்தில் லேசர் ஒளிக்கற்றையை வெளியிடும் வகையில் ஒரு இயந்திரமும், மற்றொரு புறத்தில் மைக்ரோ கண்ட்ரோலர் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள வெடிச்சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கியும் 100 மீட்டர் இடைவெளியில் தரையில் பொருத்தப்பட்டன. இந்த இரு சாதனங்களுக்கு இடையே யானைகள் புகும் போது, லேசர் ஒளியில் தடை ஏற்பட்டது. இதையடுத்து தானாகவே வெடிச்சத்தம் எழுந்தது. இரு சாதனங்களுக்கு இடையே சென்ற யானை ஒன்று, வெடிச்சத்தம் எழுந்ததால் மீண்டும் காட்டை நோக்கி சென்றது. வெடிச்சத்தம் மூலம் யானைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஒரு இயந்திரம் தயாரிக்க ரூ.10 ஆயிரம் மட்டுமே செலவாகிறது என்றார்.
இதுகுறித்து தேவர்பெட்டா கிராம விவசாயிகள் கூறும்போது, ‘இந்த கருவியில் இருந்து வெளிவரும் வெடிச்சத்தம் மூலம் யானைகள் மீண்டும் காட்டுக்குள் சென்றுவிடும். எனவே அரசு மானியத்துடன் இக்கருவியை வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்’ என்றனர்.
வனத்துறையினரிடம் கேட்டபோது, ‘கருவியில் இருந்து வெளியாகும் வெடிச்சத்தத்தை கேட்டாலே யானைகள் ஊருக்குள் வராது. சில மாற்றங்கள் செய்ய ஆலோசனைகள் வழங்கி உள்ளோம்’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT