Published : 01 Oct 2023 04:12 AM
Last Updated : 01 Oct 2023 04:12 AM

தமிழகத்தில் புதிதாக 2,000 பேருந்துகள் வாங்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் உறுதி

அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணிக்காலத்தில் உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

கடலூர்: டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் புதிதாக அரசு போக்குவரத்துக் கழகத்துக்காக 2 ஆயிரம் பேருந்துகள் வாங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்துள்ளார்.

விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக, கடலூர் மண்டல சிதம்பரம் பணிமனையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை திறப்பு, பணிக் காலத்தில் இறந்த ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 49 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வு மற்றும் 14 பேருக்கு காலமுறை பதவி உயர்வு ஆணை வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா சிதம்பரத்தில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் தலைமை வகித்தார். விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ராஜ்மோகன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வு அறையை திறந்து பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

பணிச்சுமையை போக்க...: விழாவில் அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், “கடந்த மாதத்தில் 100 பேருந்துகளை சீரமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழக முதல்வராக அவர் பொறுப்பேற்று பின்பு போக்குவரத்துக் கழகம் புதிய வடிவில் புணரமைக்கப்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பக்கத்து மாநிலங்களில் 15 நாட்கள், சில நேரங்களில் 30 நாட்கள் கழித்து அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஊதியம் பெறும் நிலை உள்ளது. ஆனால் தமிழகத்தில் பேருந்துகட்டணத்தை உயர்த்தாமல், இருக்கின்ற நஷ்ட நிலைமையிலும், அதையெல்லாம் சரி செய்து முதல்வர் போக்குவரத்து துறையை காத்து கொண்டிருக்கிறார். புதிதாக 2 ஆயிரம் பேருந்துகள் வாங்குவதற்கான நிதி ஒதுக்கி, டெண்டர் விடப்பட்டு, இறுதிக் கட்டத்தில் உள்ளது.

இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் புதிய பேருந்துகள் வர உள்ளன. ‘பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், பணிச்சுமை அதிகமாக உள்ளது’ என்ற குறையை போக்கும் வகையில் புதிய ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணி அமர்த்துவற்கான ஆணை வழங்கி அரசு போக்குவரத்துக் கழகத்தில் முதல் கட்டமாக 685 பேர் நியமிப்பதற்கான ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. 11,200 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்கள் தேர்வு பெற்று, பிறகு பணி நியமன ஆணைவழங்கப்படவுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், “10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்து வந்தகருணாநிதி ஆட்சியில் தான், விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகத்தின் விழுப்புரம் மண்டலத்தில் இருந்து கடலூர் தனி மண்டலமாக பிரிக்கப்பட்டது. தற்போது வருமானத்தை ஈட்டித் தருவதில் முதல் மண்டலமாக கடலூர் மண்டலம் திகழ்கிறது. தொழிலாளர்கள் விபத்துகள் ஏற்படுத்தாமல் பணியாற்ற வேண்டும்.

அதற்காகதான் அரசு பணிமனைகளில் குளிரூட்டப் பட்ட ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 21 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் துறையாக போக்குவரத்து துறை செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வைத்து போராட்டம் நடத்தி வந்த நிலை மாறி, தற்போது, தொழிலாளர்கள் கோரிக்கை வைக்காமலேயே, அவர்களது கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றி வருகிறார்” என்றார்.

இந்நிகழ்வில் தொமுச நிர்வாகி தங்க ஆனந்தன், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினார். கடலூர் மண்டல பொதுமேலாளர் ராஜா நன்றி கூறினார்.

கிளை மேலாளர்கள் கிருஷண மூர்த்தி, மணிவேல், உதவிப் பொறியாளர் பரிமளம், மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகன், நகரமன்ற உறுப்பினர்கள் அப்பு சந்திர சேகர், மணி கண்டன், ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சேகர், புவனகிரி ஒன்றிய திமுக செயலாளர் மனோகர் தொமுச நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x