Published : 01 Oct 2023 04:10 AM
Last Updated : 01 Oct 2023 04:10 AM

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை: குமரி - கோழிப்போர்விளையில் 65 மிமீ பதிவு

திருநெல்வேலி / தென்காசி / நாகர்கோவில்: திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது.

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 48 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இதுபோல் மாஞ்சோலையில் 25, காக்காச்சியில் 30, நாலுமுக்கு பகுதியில் 41 மி.மீ. மழை பெய்திருந்தது.

பிற இடங்கள் மற்றும் அணைப் பகுதிகளில் மழை விவரம் (மி.மீட்டரில்): அம்பாசமுத்திரம்- 7, சேரன்மகாதேவி- 2.2, மணிமுத்தாறு- 9.6, பாபநாசம்- 18, ராதாபுரம்- 9.6, சேர்வலாறு- 9, கன்னடியன் அணைக்கட்டு- 9.40, களக்காடு- 2.8, கொடு முடியாறு- 10. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 73.75 அடியாக இருந்தது.

அணைக்கு 2,906 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 954 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்ச நீர் மட்டம் கொண்ட மணி முத்தாறு அணை நீர்மட்டம் 45.50 அடியாக இருந்தது. அணைக்கு 63 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 5 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

திருநெல்வேலி மாநகரில் நேற்று காலையில் இருந்து அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. வானம் மேகமூட்டமாக இருந்தது. குளிர்ந்த காற்று வீசியதால் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நிலவிய கடும் வெப்பம் குறைந்து, இதமான காலநிலை நிலவியது. மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை மீண்டும் களைகட்டியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் அடிக்கடி சாரல் பழை பெய்து வருகிறது. நேற்று காலை வரையான 24 மணி நேரத்தில் குண்டாறு அணையில் 21 மி.மீ., ராமநதி அணையில் 8.20, தென்காசியில் 7, செங்கோட்டையில் 5.40, கடனாநதி அணையில் 5, கருப்பாநதி அணையில் 4, அடவிநயினார் அணையில் 3 மற்றும் ஆய்க்குடியில் 2 மி.மீ. மழை பதிவானது.

குற்றாலத்தில் குளிர்ந்த தென்றல் காற்றுடன் அடிக்கடி மழை பெய்து வருவதால் சாரல் சீஸன் மீண்டும் களைகட்டியுள்ளது. விடுமுறை தினமான நேற்று குற்றாத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர். நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி சாரல் மழை பெய்தது. மலைப் பகுதியில் பெய்த மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. காவல்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது அருவிகளில் குளிக்கத் தடை விதித்தனர்.

கோழிப்போர்விளையில் 65 மிமீ பதிவு: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று பரவலாக பெய்த மழையால் குளிரான தட்ப வெப்பம் நிலவியது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கோழிப்போர்விளை பகுதியில் அதிகபட்சமாக 65.6 மி.மீ மழை பதிவானது.

ரப்பர் பால்வெட்டுதல், தேங்காய் வெட்டுதல், மீன்பிடி உட்பட பல தொழில்கள் முடங்கியுள்ளன. திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிகளவில் கொட்டுகிறது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று 22.54 அடியாக இருந்தது. அணைக்கு 1,109 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து 333 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 43.50 அடியாக இருந்தது. அணைக்கு 629 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பேச்சிப் பாறையில் 29.8 மிமீ, பெருஞ் சாணியில் 30.4, சிற்றாறு ஒன்றில் 24.2, சிற்றாறு இரண்டில் 26.4, பூதப்பாண்டி 20.2, களியல் 55.2, கன்னிமார் 29.4, கொட்டாரம் 31, மயிலாடி 19.4, நாகர்கோவில் 28.4, புத்தன்அணை 30, சுருளோடு 34.2,

தக்கலை 41, குளச்சல் 32.6, இரணியல் 24, பாலமோர் 37.8, மாம்பழத் துறையாறு 26.8, திற்பரப்பு 52, ஆரல்வாய் மொழி 8.2, அடையாமடை 26.2, குருந்தன் கோடு 31.4, முள்ளங்கினாவிளை 48.2, ஆணைக் கிடங்கு 27.4, முக்கடலில் 18 மி.மீ மழை பதிவானது. இரணியல் - ஆளூர் ரயில்வே தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டது. ரயில்வே ஊழியர்கள் மணலை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மண் சரிவால் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏதும் இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x