Published : 30 Sep 2023 08:55 PM
Last Updated : 30 Sep 2023 08:55 PM
மதுரை: எஸ்டிபிஐ கட்சி சார்பில் வரும் டிசம்பர் மாதம் ‘மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு’ நடத்தப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதங்களில் ஒன்று மதச்சார்பின்மை. ஆனால், தற்போதைய பாஜக ஆட்சியில் மதச்சார்பின்மை மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அரசியலமைப்பு சாசனத்திலிருந்து மதச்சார்பின்மை, சோசலிசம் வார்த்தைகளை நீக்கும் நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு செய்துவருகின்றது.
நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பை காக்கவும், நாட்டின் ஜனநாயகம், மதச்சார்பின்மையின் லட்சியங்களை நிலைநிறுத்தவும் ‘வெல்லட்டும் மதச்சார்பின்மை’ என்ற முழக்கத்தோடு மதுரையில் டிசம்பர் மாதம் மாபெரும் 'மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு' நடத்த திட்டமிட்டுள்ளோம். இம்மாநாட்டில், அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் பங்கேற்று மாநாட்டை வெற்றிபெறச் செய்யவேண்டும்.
தமிழகத்தில் தற்போது டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் வேகமாக பரவுவது மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை உடனடியாக நிரப்பி டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார். அப்போது, மாநில துணைத்தலைவர்கள் அப்துல் ஹமீது, எஸ்.எம்.ரபீக் அகமது, மாநில பொதுச்செயலாளர்கள் அகமது நவவி, அச.உமர் பாரூக், நிஜாம் முகைதீன், நஸூருதீன், மாநில செயலாளர்கள் ரத்தினம், அபுபக்கர் சித்திக், ஏ.கே.கரீம், நஜ்மா பேகம், ராஜா ஹுசேன் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT