Published : 30 Sep 2023 03:28 PM
Last Updated : 30 Sep 2023 03:28 PM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்தசம்பா பருவத்தின்போது 856 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயிர்க் காப்பீடு செலுத்தியிருந்த நிலையில், 4 கிராம விவசாயிகளுக்கு மட்டும் ரூ.1.13 கோடி இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த 2022-2023 சம்பா பருவத்தில் சுமார் 10.50 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி மேற்கொண்டனர். இப்பயிர்களுக்கு காப்பீடு செய்ய ரிலையன்ஸ் பொது காப்பீடு நிறுவனம் மற்றும் அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் நிறுவனமும் முன்வந்தன. அதன்படி, ஏக்கருக்கு ரூ.539 வீதம் ரூ.66 கோடியை விவசாயிகள் பிரீமியமாக செலுத்தினர்.
இதனிடையே, 4 லட்சம் ஏக்கர் அறுவடை முடிந்த நிலையில், கடந்தபிப்ரவரி முதல் வாரம் பருவம் தவறிபெய்த மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த 2.50 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை மயிலாடுதுறை, நாகைமாவட்டங்களுக்கும், உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணியை தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களுக்கும் ஆய்வு செய்ய அனுப்பி வைத்தார். அதன்பின், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர்கள் 2.50 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வரிடம் அறிக்கையை வழங்கினர்.
அப்போது, முழு இழப்பீட்டுத் தொகையை, பயிர்க் காப்பீட்டு செலுத்திய நிறுவனங்களிடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், கடந்த சம்பா பருவத்தில் தமிழகம் முழுவதும் மழையால் மகசூல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையாக ரூ.560 கோடி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 21-ம் தேதி அறிவித்தார்.
இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சம்பா பருவத்தின்போது 856 கிராமங்களைச் சேர்ந்த 1,13,240 விவசாயிகள் 3,09,816 ஏக்கருக்கு ரூ.16.70 கோடி பிரீமியம் செலுத்தி இருந்தனர். இதில், தஞ்சாவூர் வட்டாரத்தில் காட்டூர், பூதலூர் வட்டாரத்தில் சோழகம்பட்டி, திருப்பனந்தாள் வட்டாரத்தில் பந்தநல்லூர், திருவிடைமருதூர் வட்டாரத்தில் கச்சுகட்டு ஆகிய 4 கிராமங்களுக்கு மட்டும் வெறும் ரூ.1.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவிரி உரிமை செயற்பாட்டாளர் வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் பயிர்க் காப்பீடு நிறுவனங்கள் சோதனை அறுவடையை முறையாக செய்யவில்லை. குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் 750 கிராமங்களில் சோதனை அறுவடை நடத்த வேண்டிய இடங்களில் வெறும் 41 இடங்களில் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. இதே போல தான் பிற டெல்டா மாவட்டங்களிலும் நடத்தியுள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாக தஞ்சாவூர் மாவட்டம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2021-2022-ல் 7 கிராமங்களுக்கு மட்டும் வெறும் ரூ.36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2022-23-ம் ஆண்டுக்கு 4 கிராமங்களுக்கு ரூ.1.13 கோடி மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இனிமேல் பயிர்க் காப்பீடு செலுத்துவதில் பலன் ஏதும் இல்லை என்ற நிலைக்கு தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.
டெல்டா மாவட்டங்களுக்கு ரூ.55.63 கோடி ஒதுக்கீடு: காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுக்கு எவ்வளவு இழப்பீடு என்பது குறித்த தகவல், அந்தந்த மாவட்ட வேளாண்மை துறை மூலம் வெளியாகியுள்ளது. இதில், நாகை மாவட்டத்தில் 32 கிராமங்களில் உள்ள 8,639 விவசாயிகளுக்கு ரூ.24 கோடியும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 122 கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.10.20 கோடியும், திருவாரூர் மாவட்டத்தில் 51 கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.20.30 கோடியும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 4 கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.1.13 கோடியும் என மொத்தம் ரூ.55.63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆய்வு செய்த பகுதிக்கே இழப்பீடு இல்லை: கடந்த சம்பா பருவத்தில் பருவம் தவறிய மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட அம்மாப்பேட்டை வட்டாரத்தில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆய்வு செய்தார். அப்போது, அவரிடம் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அந்தப் பகுதிக்கு கூட இழப்பீடு அறிவிக்கப்படவில்லை என்பதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT