Published : 29 Sep 2023 06:19 PM
Last Updated : 29 Sep 2023 06:19 PM

“அதிகார வர்க்கத்தின் ஆணவப் போக்குக்கு பலத்த அடி” - வாச்சாத்தி தீர்ப்புக்கு மாக்சிஸ்ட் வரவேற்பு

கே.பாலகிருஷ்ணன் | கோப்புப்படம்

சென்னை: "வாச்சாத்தி வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனதார வரவேற்கிறது. ஒடுக்கப்பட்ட எளிய மக்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அதிகார வர்க்கத்தின் ஆணவப் போக்குக்கு இது ஒரு பலத்த அடி" என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "1992-ம் ஆண்டு தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி பழங்குடி மக்கள் சந்தன மரங்களை கடத்துவதாக கூறி வனத்துறையினர், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்டு 269 பேர் சட்டத்துக்கு புறம்பாக காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தொடுத்து, அவர்களின் வீடுகளை நொறுக்கி, உடைமைகளை சூறையாடினர். குழந்தைகள் உட்பட பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர். 183 பேர் மீது பொய் வழக்கு புனைந்து கைது செய்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தை அறிந்தவுடனேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் பாலியல் வன்கொடுமைக்கும், பல்வேறு பாதிப்புகளுக்கும் ஆளாகி நிராயுதபாணியாக நின்ற வாச்சாத்தி கிராம பழங்குடியின மக்களுக்கு நீதி கேட்டு வழக்கு தொடுத்தது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய மாநிலச் செயலாளர் மறைந்த ஏ. நல்லசிவன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, வனத்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் நடந்த குற்றத்தை மூடி மறைக்கவே முயற்சித்தனர். அதையும் எதிர்த்து தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும் நீண்ட, நெடிய சட்டப்போராட்டங்களை நடத்தினோம். இதன் விளைவாக, 2011ம் ஆண்டு தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட 269 பேரும் குற்றவாளிகள் என்றும், அன்றைக்கு உயிருடன் இருந்த 215 பேரில் 12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேருக்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

இந்நிலையில், தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி. வேல்முருகன் கொடூரமான அடக்குமுறை நடைபெற்ற வாச்சாத்தி கிராமத்துக்கே நேரில் சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தி இன்று (செப்.29) 2011ம் ஆண்டு தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விதித்த தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளதுடன், குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ள பெண்களுக்கு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய இழப்பீட்டுத் தொகையை 10 லட்சமாக உயர்த்தி வழங்கியதோடு ரூ. 5 லட்சத்தை குற்றமிழைத்த குற்றவாளிகளிடமிருந்து வசூலித்து அளிக்க வேண்டுமெனவும், மேலும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு வேலையோ அல்லது சுயதொழிலுக்கான ஏற்பாடுகளோ வழங்கிட வேண்டுமெனவும், வாச்சாத்தி சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அப்போதைய மாவட்ட ஆட்சியர் தசதரன் ஐஏஎஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராமானுஜம் ஐபிஎஸ், மாவட்ட வன அதிகாரி எல்.நாதன் ஐஎப்எஸ் உட்பட்டோர் மீதான புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் அவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், வாச்சாத்தி கிராமத்தை முன்னேற்றுவதற்கான மேம்பாட்டு பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டுமெனவும் தீர்ப்பளித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனதார வரவேற்கிறது. 31 ஆண்டுகாலமாக நியாயத்துக்காக விடாப்பிடியாக போராடிய வாச்சாத்தி கிராம மக்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக நின்று போராடிய தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்துக்கும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துக்கும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்துக்கும், அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்துக்கும் (சிஐடியு), சிறப்பாக வழக்காடிய மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர். பிரசாத், ஆர். வைகை, மற்றும் ஜி. சம்கிராஜ், கே. இளங்கோ உள்ளிட்ட வழக்கறிஞர்களுக்கும், இப்போராட்டத்தை தலைமையேற்று நடத்திய சிபிஐ (எம்) மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம், பி. டில்லிபாபு, தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் உள்ளிட்ட அனைத்து தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது.

எனவே, உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள தீர்ப்பினை உடனடியாக அமலாக்கிட வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகையையும், அரசு வேலையும் வழங்கிடுவதோடு, ஏற்கெனவே நிலுவையில் உள்ள நிவாரணத் தொகையையும் வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

ஒடுக்கப்பட்ட எளிய மக்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அதிகார வர்க்கத்தின் ஆணவப் போக்கிற்கு இது ஒரு பலத்த அடி என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x