Last Updated : 29 Sep, 2023 05:45 PM

5  

Published : 29 Sep 2023 05:45 PM
Last Updated : 29 Sep 2023 05:45 PM

நீதிபதி கடும் எச்சரிக்கை எதிரொலி: அரை மணி நேரத்தில் கருணை பணி வழங்கிய அதிகாரிகள்!

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து தப்பிக்க, கருணை பணி கோரியவரை முதலில் தற்காலிக பணியில் நியமித்த நிலையில், நீதிபதியின் கடும் எச்சரிக்கையால் அடுத்த அரை மணி நேரத்தில் நிரந்தர பணியில் நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கரூர் மாவட்டம் குளித்தலை தோகைமலையைச் சேர்ந்த அமிர்தவள்ளி. இவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் கருப்பையா, கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்தபோது உயிரிழந்தார். இதனால் தனது கணவருக்கு சேர வேண்டிய பணப்பலன்கள் மற்றும் கருணை பணி கேட்டு மனு அளித்தேன். ஆனால் என் கணவர் தற்காலிக பணியாளராக தான் இருந்தார். இதனால் கருணை பணி வழங்க முடியாது என்றுகூறி எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதனால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். இதனை விசாரித்த நீதிபதி, என் கணவர் 427 நாட்கள் பணியாற்றியிருப்பதால், அவரை நிரந்தர பணியாளராகவே கருத வேண்டும். இதனால் பணப்பலன் மற்றும் கருணை பணி வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை நிறைவேற்றாததால் போக்குவரத்து கழக அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நீதிமன்ற உத்தரவு 3 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை. நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் ஏதோ ஒரு அலுவலக உத்தரவு போல் நினைக்கின்றனர். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படும். நீதிமன்ற உத்தரவை 2 நாளில் கருணை பணி வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த மனு, நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் மோகன், பொது மேலாளர் இளங்கோவன் ஆகியோர் ஆஜராகி, உயர் நீதிமன்ற உத்தரவு கருணை அடிப்படையில் கருப்பையாவின் மகன் தினக்கூலி பணியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தனர்.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.ராகுல் வாதிடுகையில், புதுக்கோட்டை மண்டலத்தில் மட்டும் 183 நடத்துநர் பணியிடங்கள் காலியாக உள்ளது. ஆனால் மனுதாரரின் மகனுக்கு இளவரசுக்கு தற்காலிக பணிதான் வழங்கப்பட்டுள்ளது. மனுதாரரின் மகனை நிரந்தர பணியில் நியமிக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து நீதிபதி, உயிரிழந்த ஊழியரின் சட்டபூர்வ வாரிசுக்கு உடனடியாக கருணை அடிப்படையில் நிரந்தர பணி வழங்க வேண்டும். இல்லையெனில் நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இந்த எச்சரிக்கையை தொடர்ந்து அடுத்த அரை மணி நேரத்தில் மனுதாரரின் மகனை கருணை அடிப்படையில் நடத்துநராக நியமித்து உத்தரவு வழங்கப்பட்டது.

இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் கருணை பணி பெற்றவர்களை அதிகாரிகள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. வறுமையில் வாடுவோருக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். கருணைப் பணி பெற்றவர்கள் மீது எந்த வன்மத்தையும் காட்டக்கூடாது. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x