Published : 29 Sep 2023 04:33 PM
Last Updated : 29 Sep 2023 04:33 PM
திருப்பத்தூர்: ஆம்பூரில் இருந்து சென்னைக்கு அரசுப் பேருந்துகள் மூலம் இறைச்சி வகைகள் அட்டை பெட்டிகளில் கொண்டு செல்லப்படுவதை உணவு பாதுகாப்பு துறையினர் கண்காணித்து தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தோல் தொழிலுக்கு மட்டும் பிரசித்திப்பெற்றது அல்ல. இறைச்சி உணவு விற்பனையிலும் பிரசித்திப்பெற்றது. சென்னையில் இருந்து பெங்களூரு செல்பவர்களும், பெங்களூருவில் இருந்து சென்னை செல்பவர்களும் ஆம்பூரில் நின்று ‘ஆம்பூர் பிரியாணியை’ கட்டாயம் சாப்பிட்டு விட்டு தான் தங்களது பயணத்தை தொடர்கின்றனர். அந்த அளவுக்கு ஆம்பூர் பிரியாணி பிரசித்திப்பெற்றதாக திகழ்கிறது.
ஆம்பூரில் தயாரிக்கப்படும் பிரியாணி உணவு வகைகள் ரயில்கள் மூலமாகவும் விற்பனை செய்யப்படுவது கூடுதல் சிறப்பு. அதேபோல, இறைச்சி விற்பனையிலும் ஆம்பூர் முக்கிய இடத்தை பிடிக்கிறது. இங்கு கிடைக்கும் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற இறைச்சி வகைகள் அருகாமையில் உள்ள மற்ற ஊர்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படும் வழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது.
30 முதல் 50 கி.மீ., தொலைவுக்கு கொண்டு செல்லப்பட்டு வந்த ஆம்பூர் இறைச்சி தற்போது 230 கி.மீ., தொலைவுள்ள சென்னை வரை கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவதாகவும், ஆம்பூரில் இருந்து சென்னை செல்ல 5 மணி நேரத்துக்கும் மேலாகும் என்பதால் பேருந்துகளில் கொண்டு செல்லப்படும் இறைச்சி வகைகள் கெட்டுப்போகவும் வாய்ப்பிருப்பதால், உணவு பாதுகாப்பு துறையினர் கண்காணித்து தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் இருந்து தினசரி 30-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் சென்னைக்கு வாணியம்பாடி, ஆம்பூர் வழியாக இயக்கப்படுகின்றன. அதேபோல, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் போன்ற பகுதிகளில் இருந்தும் 50-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள், சொகுசு பேருந்துகள் சென்னைக்கு தினசரி இயக்கப்படுகின்றன.
அவ்வாறு இயக்கப்படும் பேருந்துகள் ஆம்பூர், வாணியம்பாடி போன்ற பகுதிகளுக்கு வரும்போது அங்கிருந்து இறைச்சி வகைகள் அட்டை பெட்டிகள், மர பெட்டிகள் மூலம் அடைக்கப்பட்டு அந்த பெட்டிகள் மேலே பிளாஸ்டிக் ‘டேப்’ ஒட்டப்பட்டு பேருந்து பக்கவாட்டில் உள்ள ‘உடமைகள் பாதுகாப்பறை’ யில் வைக்கப்பட்டு சென்னை, காஞ்சிபுரம் போன்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
ஆம்பூரில் இருந்து கொண்டு செல்லப்படும் மாட்டிறைச்சி வகைகள் சென்னை போன்ற பெரு நகரங்களில் ஆட்டிறைச்சி என்ற பெயரில் உணவகங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க, பேருந்து மூலம் கொண்டு செல்லப்படும் இறைச்சி வகைகள் சென்னை செல்ல குறைந்த பட்சம் 5 மணி முதல் 6 மணி நேரம் வரை ஆகிறது.
இதில், அட்டை மற்றும் மர பெட்டிகளில் வைக்கப்படும் இறைச்சி வகைகளை பதப்படுத்த ஏற்பாடுகள் செய்வது இல்லை. இதனால், சென்னை செல்லும் இறைச்சி வகைகள் விரைவில் கெட்டுப்போக அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு காலாவதியான உணவு வகைகளை உண்பதால் பொது மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறையினர் பல்வேறு ஆய்வுகளை நடத்தி உணவகங்களில் காலாவதியான உணவுகளை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட உணவகங்களுக்கு ‘சீல்’ வைத்து வருகின்றனர்.
அதேபோல, வெளியூர்களில் இருந்து பேருந்துகள், தனி வாகனங்கள் மூலம் பாதுகாப்பு இல்லாமல் கொண்டு செல்லப்படும் இறைச்சி வகைகளையும் கண்காணித்து அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும். பேருந்துகளில் கொண்டு செல்லப்படும் இறைச்சியில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் பேருந்து முழுவதும் வீசுவதால் அதில் பயணிக்கும் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சரக்கு கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணம் கொடுத்து சென்னைக்கு இறைச்சி வகைகளை அனுப்பி வைக்கும் நடைமுறை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கண்காணித்து தடுக்க வேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக உள்ளது’’ என்றனர்.
இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினரிடம் கேட்டபோது, ‘‘சென்னை செல்லும் பேருந்துகளில் இறைச்சி கடத்தப் படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது தொடர்பாக ஆய்வு நடத்தி வருகிறோம். இது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துநர், இறைச்சி விற்பனையாளர்கள் என அனைவர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT