Published : 29 Sep 2023 04:27 PM
Last Updated : 29 Sep 2023 04:27 PM

பச்சையப்பன் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமன விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல்

சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் உள்ள 254 உதவிப் பேராசிரியர்கள் நியமனங்கள் குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான இரு நபர் குழுவின் விசாரணை அறிக்கை, மூடி முத்திரையிடப்பட்ட உறையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான ஆறு கல்லூரிகளில் 2013 முதல் 2015-ம் ஆண்டுகளில் உதவிப் பேராசிரியர்கள் நியமனங்கள் நடந்தன. இந்த நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, 254 உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, அவர்களின் நியமனத்தை செல்லாது என அறிவித்து 2022-ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து உதவி பேராசிரியர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், 254 உதவி பேராசிரியர்களின் பணி நியமனத்தை ஒட்டுமொத்தமாக செல்லாது என அறிவித்த தனி நீதிபதியின் உத்தரவை நிறுத்தி வைத்து 2022-ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி உத்தரவிட்டது.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, உதவிப் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி B.கோகுல்தாஸ் தலைமையில் இரு நபர் குழுவை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதி கோகுல்தாஸுக்கு உதவியாக, சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி முன்னாள் முதல்வர் ஃப்ரீதா ஞானராணியை நியமித்தும் உத்தரவிட்டிருந்தது.

இந்தக் குழு, உதவிப் பேராசிரியர் தேர்வு தொடர்பான அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் தேவைப்படும் கல்வித் தகுதி ஆகியவற்றை ஆய்வு செய்து, தகுதியானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா, இல்லையா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான குழுவின் அறிக்கை, மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை ஆய்வு செய்தபின் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x