Published : 29 Sep 2023 03:55 AM
Last Updated : 29 Sep 2023 03:55 AM
சென்னை: நாட்டின் பசுமை புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயது முதிர்வு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 98. சுற்றுச்சூழல், வேளாண்மை துறையில் அளப்பரிய பங்காற்றிய எம்.எஸ்.சுவாமிநாதனை கவுரவிக்கும் விதமாக, அவருக்கு காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர் புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் (98). கடந்த 1925 ஆக.7-ம் தேதி கும்பகோணத்தில் பிறந்த இவர், சென்னை தரமணியில் எம்.எஸ்.
சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவி, அதன் தலைவராகவும், ஆலோசகராகவும் இருந்தார்.
மத்திய அரசின் விவசாயிகளுக்கான தேசிய ஆணையத் தலைவர், உணவு பாதுகாப்புக்கான சர்வதேச குழுவின் (CFS) உயர்நிலை நிபுணர் குழு தலைவர், மாநிலங்களவை உறுப்பினர், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை இயக்குநர் என பல முக்கிய பதவிகள், பொறுப்புகளை வகித்தவர். பத்ம விபூஷன், ராமன் மகசேசே விருது உட்பட பல உயரிய விருதுகளை பெற்றவர்.
இவர் கடந்த சில நாட்களாக வயது முதிர்வு காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டை ரத்னா நகரில் உள்ள தனது இல்லத்தில் நேற்று காலை 11.20 மணி அளவில் காலமானார்.
இதையடுத்து, அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அமமுக துணை பொதுச் செயலாளர் ஜி.செந்தமிழன், ‘இந்து’ என்.ராம், தமிழ்நாடு அனைத்துவிவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வரும் விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்களின் அஞ்சலிக்காக, சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை வளாகத்தில் அவரது உடல் இன்று காலை 8.30 முதல் நாளை காலை 10 மணி வரை வைக்கப்படுகிறது.
‘உலகம் போற்றும் விஞ்ஞானியாக, சுற்றுச்சூழல் - வேளாண்மை துறையில் அளப்பரிய பங்காற்றியவர் எம்.எஸ்.சுவாமிநாதன். அவரை கவுரவிக்கும் விதமாக, அவருக்கு காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும்’ என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு குறித்து அவரது மகள் சவுமியா சுவாமிநாதன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எனது தந்தை கடந்த 10 நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் விரும்பியபடி, வீட்டிலேயே அவரது உயிர் பிரிந்தது. வேளாண்மை, விவசாயிகள், அவர்களது வாழ்வாதாரத்தை எப்படி முன்னேற்றலாம், அதற்கு அவர்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்பது போன்ற எண்ணங்களே அவரது மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருந்தன. குறிப்பாக, பெண் விவசாயிகள் மீது மிகுந்தஅன்பும், அக்கறையும் கொண்டிருந்தார்.
நேற்றுகூட விழுப்புரம் மாவட்டம், நாவலூர் கிராமத்தில் 1,000-க்கும் மேற்பட்ட மகளிர் உழவர் உற்பத்தியாளர் குழுவினரை சந்தித்தேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தைதான் அவர்களுக்கு, உழவர் உற்பத்தியாளர் குழுவை ஏற்படுத்துமாறு ஆலோசனை கூறி, உத்வேகம் அளித்தார். தந்தையை கேட்டதாக சொல்லுங்கள் என்று அந்த விவசாய மகளிர் நேற்று என்னிடம் தெரிவித்தனர்.
வாழ்நாளில் அவர் மருத்துவமனைக்கே சென்றதில்லை. அதனால், அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோதும் வீட்டிலேயே வைத்து கவனித்துக்கொண்டோம். அவர் விஞ்ஞானி மட்டுமல்ல. மனிதநேயம் மிக்கவர். வெளிநாட்டில் இருக்கும் எனது 2 சகோதரிகளும் வந்துகொண்டு இருக்கின்றனர். தந்தையின் இறுதிச்சடங்குகள் 30-ம் தேதி (நாளை) நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்: எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: சர்வதேச அளவில் புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவு மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. உணவுப் பாதுகாப்பைஅடைவதற்காக உழைத்த தொலைநோக்கு பார்வையாளர். உணவு தானியங்களில் நாட்டின் தன்னிறைவை உறுதிப்படுத்தியதற்காக பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டவர். இந்தியவிவசாயத்தில் வளமான பாரம்பரியத்தை அவர் விட்டுச் செல்கிறார். இது மனிதகுலத்துக்கான பசியற்ற எதிர்காலத்துக்கு வழிகாட்டும்.
பிரதமர் நரேந்திர மோடி: எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. நமது நாட்டின் வரலாற்றில் மிக முக்கிய காலகட்டத்தின்போது விவசாயத்தில் அவர் ஆற்றிய மகத்தான பணிதான், கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்தது. நமது தேசத்தின் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்தது. அவருடன் பேசியதைநான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT