Published : 29 Sep 2023 05:31 AM
Last Updated : 29 Sep 2023 05:31 AM
சென்னை: அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மாதம் கழித்து மேல்முறையீடு செய்துள்ளார்.
கடந்த 2022 ஜூலை 11 அன்று நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்தும்,பழனிசாமி பொதுச்செயலாளராக பதவி வகிக்க தடை கோரியும், அதிமுகவில் இருந்து தங்களை நீக்கியதை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான பி.எச்.மனோஜ்பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜேசிடி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்ற தனிநீதிபதி கே.குமரேஷ்பாபு, அதிமுகபொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி ஓபிஎஸ்தரப்பு தாக்கல் செய்திருந்த இடைக்கால மனுக்களை கடந்த மார்ச்மாதம் நிராகரித்து உத்தரவி்ட்டிருந் தார். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்துள்ள பிரதான மனு தனி நீதிபதி முன்பாக தொடர்ந்து நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தனி நீதிபதியின் இந்த இடைக்கால தீர்ப்பை எதிர்த்துஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வந்தது.
இதில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல்செய்யப்பட்டிருந்த எழுத்துப்பூர்வ வாதத்தில், இந்த இடைக்கால மனுவில் நிவாரணம் வழங்கவில்லை எனில் தங்களுக்கு மிகப்பெரியபாதிப்பு ஏற்படும். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக எந்த நீதிமன்றமும் தனதுதீர்ப்புகளில் கூறவில்லை. அதிமுகவில் தாம் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவதை இபிஎஸ் தரப்பால் தடுக்க முடியாது. எனவே இபிஎஸ் பொதுச்செயலாளராக செயல்பட தடை விதிக்க வேண்டும், என கோரப்பட்டிருந்தது.
அதற்கு ஆட்சேபம் தெரிவித்து இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வ வாதத்தில், ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரையும் கட்சியை விட்டு நீக்கி கடந்த 2022ஜூலை 11-ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 8 மாதங்கள் மவுனம் காத்த ஓபிஎஸ் உள்ளிட்ட மனுதாரர்கள் அதன்பிறகு தடை கோரி வழக்குதொடர்ந்துள்ளனர். 2022 ஜூலை 11 அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் எந்த தடையும் விதிக்காத நிலையில், அந்த தீர்மானங்களின் அடிப்படையிலேயே கட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து இந்த மேல்முறையீட்டு வழக்கில் கடந்த ஆக.25 அன்றுதீர்ப்பளித்த நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்திருந்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அதிமுக, பாஜக கூட்டணி முறிந்துவிட்ட நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தற்போது ஓபிஎஸ் ஒரு மாதம் கழித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதேபோல ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த மற்றவர்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
‘பாஜகவுக்கு பழனிசாமி நம்பிக்கை துரோகம்’: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசியல் நிலவரம், தொண்டர்களை தொடர்புகொள்ள புரட்சி பயணம் மேற்கொள்வது, பொதுக்குழு விவகாரத்தில் உயர்நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சட்டம் போராட்டம் நடத்துவது குறித்து கூட்டத்தில் விவாதித்தோம்.
பாஜக தேசிய நிர்வாகிகள் எங்களை கடந்த 3 மாதங்களாக தினமும்தொடர்புகொண்டு வருகின்றனர். கூட்டணி குறித்து பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் தான், நாங்கள் உரிய முடிவெடுக்க முடியும். மத்தியில் பாஜக 3-வது முறையும் ஆளும் தகுதி கொண்டது. பழனிசாமிதொடர் நம்பிக்கை துரோகம் செய்து வருகிறார். பிரதமர் பக்கத்தில் அமரவைத்த பிறகும், கூட்டணி இல்லை என பாஜகவுக்கு நம்பிக்கை துரோகம் செய்துள்ளார். அனைவரும் சேர்ந்து தேர்தலை சந்தித்தால் தான் பெற்றிபெற முடியும். பழனிசாமிதான் சேர மறுக்கிறார்.
இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.
பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது: அரசியலுக்கு நம்பகத்தன்மை மிக முக்கியம். பழனிசாமியை நம்பமுடியாது. நம்பகத்தன்மை மிக்கவர் என நிரூபித்தவர் ஓ.பன்னீர்செல்வம்.ஜெயலலிதா, அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது தவறு. அவர்பேசி 4 நாட்களுக்கு பிறகு, ‘2026 தேர்தலில் நான் முதல்வர் வேட்பாளர்’என அண்ணாமலை அறிவித்ததுதான் பழனிசாமியால் ஏற்க முடியவில்லை. அப்போதுதான் அண்ணா குறித்து பேசியதாக அண்ணாமலையை எதிர்த்தார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் பழனிசாமி தலைமையை ஏற்க வேண்டும் என்பதுதான் அவர் எண்ணம். முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில்தான் கூட்டணியை முறித்துக்கொண்டனர்.
தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். நிர்வாகிகள்தான் பழனிசாமி பக்கம் உள்ளனர். தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர் என்பதை 2024 மக்களவைத் தேர்தலில் நிரூபிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT