Published : 29 Sep 2023 06:10 AM
Last Updated : 29 Sep 2023 06:10 AM

4.8 கிலோ நகைகளுடன் கார் கடத்தல்: 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை

4.8 கிலோ தங்க நகைகளுடன் கார் கடத்தப்பட்டது குறித்து காரிமங்கலம் காவல் நிலையத்தில் சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, தருமபுரி எஸ்.பி ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

தருமபுரி: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே 4.8 கிலோ தங்க நகைகளுடன் காரை கடத்திச் சென்ற மர்ம கும்பலை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை ராஜவீதியைச் சேர்ந்தவர் நகைக் கடை உரிமையாளர் பிரசன்னா (40). தன் கடைக்கு தேவையான தங்க நகைகளை கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து வாங்குவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் பிரசன்னா, கடை பணியாளர்களான விஜயகுமார் (46), சுரேஷ்குமார் (45), ஜெய்சன் (40) ஆகியோருடன் காரில் பெங்களூருவுக்கு சென்றார். தேவையான நகைகளை வாங்கிக் கொண்டு இரவு கோவை நோக்கி புறப்பட்டுள்ளனர்.

அவர்கள் சென்ற காரில் 4.8 கிலோ தங்க நகைகள் இருந்தன. நள்ளிரவில் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த ஆலப்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, பிரசன்னாவின் காரை பின் தொடர்ந்து வந்த 2 கார்கள் திடீரென அவரது காரை வழிமறித்துள்ளன. 2 கார்களில் இருந்தவர்கள் பிரசன்னாவின் காரில் இருந்த அனைவரையும் கீழே இறக்கி தாக்கிவிட்டு நகைகள் வைக்கப்பட்டிருந்த காரை கடத்திச் சென்றனர்.

இதுகுறித்து பிரசன்னா காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தகவல் அறிந்த சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, தருமபுரி எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். நகைகளுடன் காரை கடத்திச் சென்ற மர்ம நபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

கார் மீட்பு: இந்நிலையில், கடத்தப்பட்ட காரை தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் கொல்லாபுரியம்மன் கோயில் அருகே சாலையோரம் போலீஸார் மீட்டனர். அந்தக் காரில் போலீஸார் சோதனை மேற்கொண்டபோது காருக்குள் நகைகள் எதுவும் இல்லை. எனவே, மர்ம நபர்களை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x