Published : 29 Sep 2023 06:06 AM
Last Updated : 29 Sep 2023 06:06 AM

தமிழகத்தில் சிறு துறைமுகங்களை மேம்படுத்துவது குறித்து சிங்கப்பூர் துறைமுக பிரதிநிதிகளுடன் அமைச்சர் வேலு ஆலோசனை

சென்னை: சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தின் அழைப்பை ஏற்று, அமைச்சர் எ.வ.வேலு நேற்று முன்தினம் சிங்கப்பூர் சென்றார். அங்கு நேற்று சிங்கப்பூர் துறைமுகத்தில் சரக்குப் பெட்டக முனையத்தை பார்வையிட்டார். உடன், துறையின் செயலர் பிரதீப் யாதவ், சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரக ஆணையத்தின் செயலர் டி.பிரபாகர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவும் சென்றிருந்தது.

அப்போது, அமைச்சரிடம் சிங்கப்பூர் துறைமுகத்தின் செயல்பாடுகள், சிறப்புகள் குறித்து, அத்துறைமுகத்தின் பிரதிநிதி விளக்கினார்.

பன்னாட்டு துறைமுக சரக்குப் பெட்டக முனையங்களில், சிங்கப்பூர் சரக்குப் பெட்டக முனையம் முதன்மையானது. இது சிங்கப்பூர்சரக்குப் பெட்டக பரிமாற்ற மையமாக செயல்பட்டு வருகிறது.இம்முனையம் இந்தாண்டு சரக்குகளை கையாள்வதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், 37 மில்லியன் சரக்குப் பெட்டகங்களை வெற்றிகரமாக கையாண்டுள்ளது. பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு, கணினி சார்ந்த ஒருங்கிணைந்த துறைமுக முனைய இயங்கு வசதி, துறைமுக இணையதளம் போன்ற நவீன தொழில்நுட்பங்களின் செயல்பாடுகளே இதற்கு காரணமாகும். சிங்கப்பூர் துறைமுகம் 55 கப்பல்கள் நிறுத்தும் தளம் மற்றும் 50 மில்லியன் சரக்கு பெட்டகங்களை கையாளும் திறன் கொண்டது என்று துறைமுக பிரதிநிதி அமைச்சர் வேலுவிடம் தெரிவித்தார்.

தமிழகத்தில் 1076 கிமீ நீளமுள்ள கடற்கரை உள்ளது. கடலூர், நாகப்பட்டினம் ஆகியஇடங்களில் சிறு துறைமுகங்கள் அமைந்துள்ளது. இந்த துறைமுகங்களையோ அல்லது இதர சிறு துறைமுகங்களில் ஏதேனும் பொருத்தமான துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறு'' குறித்து சிங்கப்பூர் துறைமுக அலுவலர்களுடன் அமைச்சர் விவாதித்தார்.

தமிழக கடற்கரையின் திறனைப் பயன்படுத்தி வர உள்ள திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதுதவிர, தமிழகத்தில் சிறு துறைமுகங்களை மேம்படுத்தும் வகையில் அன்னிய முதலீட்டை அதிகரிக்கும் சாத்தியங்கள், வழிகள் குறித்தும் சிங்கப்பூர் துறைமுக பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x