Published : 28 Sep 2023 05:57 PM
Last Updated : 28 Sep 2023 05:57 PM
சென்னை: உலகம் போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல், வேளாண்மைத் துறையில் அளப்பரிய பங்காற்றிய எம்.எஸ்.சுவாமிநாதனை கவுரவிக்கும் விதமாக, அவருக்கு காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானியும், இந்திய ‘பசுமைப் புரட்சி’யின் சிற்பியுமான எம்.எஸ்.சுவாமிநாதன் வியாழக்கிழமை காலை 11.20 மணியளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 98. அவரது மறைவுக்கு, பசிப்பிணி ஒழிப்பு உணவுப் பாதுகாப்பு என்ற இரு குறிக்கோள்களுக்காகக் கடந்த முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றி வந்த தலைசிறந்த வேளாண் அறிவியலாளர் எம்.எஸ் சுவாமிநாதன் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார்.
நீடித்து நிலைத்த உணவுப் பாதுகாப்புக்காக ஆற்றிய பங்களிப்புகளுக்காக பசுமைப் புரட்சியின் தந்தை எனப் பரவலாகப் போற்றப்படும் சுவாமிநாதன், உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (IRRI), இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) முதலிய பல்வேறு பன்னாட்டு மற்றும் அரசு ஆராய்ச்சி நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் பணியாற்றிய சிறப்புக்குரியவர் ஆவார். சமூகத் தலைமைக்கான ராமன் மகசேசே விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை சுவாமிநாதன் பெற்றுள்ளார்.
உலகம் போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல், வேளாண்மைத்துறையில் அளப்பரிய பங்காற்றிய சுவாமிநாதனை கவுரவிக்கும் விதமாக, அவருக்கு காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாசிக்க > அஞ்சலி | வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் ‘பசியில்லா இந்தியா’ கனவும், பசுமைப் புரட்சி சாதனைகளும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT