Last Updated : 28 Sep, 2023 05:14 PM

 

Published : 28 Sep 2023 05:14 PM
Last Updated : 28 Sep 2023 05:14 PM

புதிய ரயில்களை இயக்க முடியாமல் தொடரும் சிக்கல்: சேலத்தில் ரயில்வே பிட் லைன் அமைப்பது கட்டாயத் தேவை!

ரயில் பெட்டிகள் பராமரிப்பு வசதி இல்லாததால், சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பகல் முழுவதும் பயன்பாடு இன்றி நிறுத்தி வைக்கப்பட்டு வரும் சேலம்- சென்னை எழும்பூர் விரைவு ரயில்.

சேலம்: தெற்கு ரயில்வேயில் பாலக்காடு கோட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, 2006-ம் ஆண்டு சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது தெற்கு ரயில்வேயில் உள்ள கோட்டங்களில் சிறப்பான செயல்பாட்டில் சேலம் கோட்டம் முன்னணியில் உள்ளது. குறிப்பாக, பயணிகள் சேவை, சரக்கு மற்றும் பார்சல் போக்குவரத்து ஆகியவற்றில் சிறப்பான நிலையில் சேலம் ரயில்வே கோட்டம் உள்ளது. ஆனால், கோட்டத்தின் தலைமை இடமாக சேலம் இருந்தும், இங்கிருந்து புதியதாக எந்தவொரு ரயிலும் இயக்கப்படாதது மக்களையும், ரயில்வே ஆர்வலர்களையும் வருத்தமடையச் செய்துள்ளது.

மாநில தலைநகரமாக இருக்கும் சென்னைக்கு சேலத்தில் இருந்து பகலில் விரைவு ரயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஆனால், அது செயல்பாட்டுக்கு வராமல் உள்ள நிலையில், இதுபோல, ரயில்வே சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் மக்களிடம் உள்ளன. அந்த கோரிக்கைகளுக்கு, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், தொழில்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் கூறியது: சேலத்தை தலைமை இடமாகக் கொண்டு, புதிய ரயில்வே கோட்டம் உருவாக்கப்பட்டதும், மாவட்டத்தில் புதிய ரயில் பாதைகள் அமைப்பு, புதிய ரயில்கள் இயக்கம் என திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், சேலம் வழியாக செல்லும் பழைய ரயில்வே வழித்தடங்கள் மட்டுமே இன்றுவரை உள்ளது.

புதிய வழித்தடம்: ஆத்தூரில் இருந்து பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் ஆத்தூர்- அரியலூர் புதிய ரயில் பாதை திட்டம் அமைக்கும் திட்டம், தற்போது வரை ஆய்வுக்கான அறிவிப்பு கூட இல்லாமல் உள்ளது. இதேபோல், அண்டை மாவட்டமான கள்ளக்குறிச்சியை இணைக்கும் சின்னசேலம்- கள்ளக்குறிச்சி புதிய ரயில் பாதை திட்டம், சுமார் 22 கிமீ நீளம் மட்டுமே இருந்தாலும் கூட ரயில்பாதை அமைக்கும் பணி பல ஆண்டுகளாக நத்தை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

பகல் நேரத்தில் ரயில்: சேலம்- விருத்தாசலம் வழித்தடத்தில் சென்னைக்கு பகல் நேரத்தில் விரைவு ரயில் இயக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பிய நிலையிலும், அதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளில் உள்ள வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி வட்டங்களைச் சேர்ந்த மக்களில் பல்லாயிரம் பேர், சென்னையில் பணியாற்றியும், கல்லூரிகளில் பயின்றும் வருகின்றனர்.

பண்டிகை சிறப்பு ரயில்: ஆனால், அவர்கள் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து சொந்த ஊர் வருவதற்கு, இடம் கிடைக்காமல், சுமார் 5 மணி நேரம் பேருந்துகளில் நின்று கொண்டே பயணிக்கும் அவலம் நீடிக்கிறது. ஆனால், தீபாவளி, பொங்கல் உள்பட எந்தவொரு பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில், சேலம்- விருத்தாசலம் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதே கிடையாது.

இரட்டை பாதை: சேலம் மாவட்டத்தின் வழியாக செல்லும் முக்கிய பாதையாக, சேலம்- விருத்தாசலம் ரயில் பாதை உள்ளது. இது போக்குவரத்து அதிகம் கொண்ட சேலம் மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையங்களை இணைக்கும் பாதையாக உள்ளது. ஆனால், இந்த பாதை ஒற்றை வழித்தடமாக இருப்பதால், சேலம்- விருத்தாசலம் வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம் அடிக்கடி தாமதமாகிறது. எனவே, இதை இரட்டை வழித்தடமாக மாற்ற வேண்டும்.

இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, சேலம் ரயில்வே கோட்டம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில் திட்டங்களை பெற்றுத் தர, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்துறை அமைப்புகள், விவசாயிகள், பொதுமக்கள், எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள் உள்ளிட்டோர் ரயில்வே துறைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், என்றனர்.

சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம். படங்கள்: எஸ்.குரு பிரசாத்

தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் ஜி.ஹரிஹரன் பாபு கூறியது: தமிழகத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மாவட்டமாக, சேலம் உள்ளது. எனவே, சேலத்தில் இருந்து தென் மாவட்டங்கள், வட கிழக்கு மாவட்டங்கள் ஆகியவற்றுக்கு கூடுதல் ரயில்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ரயில்களை, சேலத்தில் இருந்து இயக்குவதற்கு, பிட் லைன் எனப்படும் ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையம், இ.டி.ஆர் (Engine Turn Round) எனப்படும் ரயில் இன்ஜினை, ரயில் பெட்டிகளில் மாற்றி இணைக்கும் வசதி ஆகியவை தேவை.

இவை, ஒரு ரயில்வே கோட்டத்தில் இருக்க வேண்டிய அத்தியாவசியமான தேவைகள். சேலத்தில் பிட் லைன் அமைத்தால், இங்கேயே ரயில் பெட்டிகளை பராமரிக்க வசதி கிடைக்கும். இதன் மூலம் சேலத்தில் இருந்து புதிய வழித்தடங்களில் ரயில்களை இயக்க முடியும். இதற்காக, சேலம் டவுன் ரயில் நிலையம் அருகே பொன்னம்மாபேட்டையில் செயல்பட்டு வந்த சேலம் கிழக்கு ரயில் நிலையத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும், என்றார்.

பிட் லைனின் அவசியம்: சேலத்தில் பிட்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டால், சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில், பகல் முழுவதும் வீணாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சேலம்- சென்னை எழும்பூர் விரைவு ரயிலை பராமரிப்பு செய்து, சேலம்- கோவை அல்லது சேலம்- திருச்சி என குறுகிய வழித்தடங்களில் இயக்க வாய்ப்பு ஏற்படும்.

இதேபோல, அயோத்தியாப்பட்டணத்தை, சேலத்தில் 2-வது ரயில் முனையமாக ஏற்படுத்தினால், சேலம்- மயிலாடுதுறை விரைவு ரயில், சேலம்- கோவை பயணிகள் ரயில், சேலம்- காட்பாடி பயணிகள் ரயில் ஆகியவற்றை, அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து இயக்கும்போது, சேலம் டவுன், சேலம் செவ்வாய்ப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு உட்பட்டவர்களுக்கு நேரடி ரயில் வசதி கிடைக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x