Published : 28 Sep 2023 03:52 PM
Last Updated : 28 Sep 2023 03:52 PM

புகழஞ்சலி - எம்.எஸ்.சுவாமிநாதன் | “இந்திய தன்னிறைவுக்கு முக்கியப் பங்கு வகித்தவர்!” - தினகரன்

இடது: எம்.எஸ்.சுவாமிநாதன் | வலது: டிடிவி தினகரன்

சென்னை: "வேளாண்மையில் விஞ்ஞானத்தை புகுத்தி சாதனை படைத்த இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன், இந்திய நிலப்பரப்பில் ஏற்படுத்திய சாதனைகளும் அவர் மேற்கொண்ட வேளாண் ஆராய்ச்சிகளும் இவ்வுலகம் இருக்கும் வரை நிலைத்திருக்கும்" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவரும், உணவு உற்பத்தியில் இந்தியா இன்று அடைந்திருக்கும் தன்னிறைவுக்கு முக்கிய பங்காற்றியருமான வேளாண் விஞ்ஞானி பத்மஸ்ரீ எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவு ஒட்டுமொத்த வேளாண் அறிவியல் உலகுக்கே ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய பாரம்பரிய விளைநிலத்தில் தனது நவீன கனவுகளை விதைத்து, உணவு உற்பத்தியில் இந்தியாவை ஒரு புதிய சகாப்தம் படைக்க செய்ததோடு, உணவுக்காக உலக நாடுகளிடம் கையேந்தும் நிலையில் இருந்த இந்தியாவை, தனது பசுமைப் புரட்சியின் மூலம் மாற்றிக் காட்டிய மகத்தான மனிதர் என அனைவராலும் போற்றக்கூடியவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.

வேளாண்மையில் விஞ்ஞானத்தை புகுத்தி சாதனை படைத்த இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன், இந்திய நிலப்பரப்பில் ஏற்படுத்திய சாதனைகளும் அவர் மேற்கொண்ட வேளாண் ஆராய்ச்சிகளும் இவ்வுலகம் இருக்கும் வரை நிலைத்திருக்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தியாவின் சிறந்த வேளாண் விஞ்ஞானியும், பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் இன்று காலமானார். அவருக்கு வயது 98.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 11.20 மணி அளவில் அவர் உயிர் இழந்துள்ளார். அதே இல்லத்ததில் சுவாமிநாதனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு சவும்யா சாமிநாதன், மதுரா சுவாமிநாதன், நித்யா ராவ் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இவரது மனைவி முன்பே உயிரிழந்துவிட்டார். | வாசிக்க > ''தமிழகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு'' - எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு முதல்வர் புகழஞ்சலி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x