Last Updated : 09 Dec, 2017 09:53 AM

 

Published : 09 Dec 2017 09:53 AM
Last Updated : 09 Dec 2017 09:53 AM

கிருஷ்ணகிரி அணையில் மதகின் கதவு உடைந்ததால் 1.4 டிஎம்சி தண்ணீரை வீணாக வெளியேற்றிய அவலம்: மேலும் 2 பொறியாளர்கள் பணியிடை நீக்கம்; வெள்ளை அறிக்கை வெளியிட கோரிக்கை

கிருஷ்ணகிரி அணையின் மதகு கதவு (ஷட்டர்) உடைந்ததால் 1.4 டிஎம்சி தண்ணீரை வெளியேற்றியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உடைந்த ஷட்டரை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஷட்டர் உடைந்ததற்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்ற 8 பிரதான மதகுகள் உள்ளன. இவற்றில் முதல் மதகின் ஷட்டர் கடந்த மாதம் 29-ம் தேதி மாலை உடைந்து அதன் வழியே தண்ணீர் வெளியேறியது. அந்த பகுதியில் நீர் அழுத்தத்தை குறைக்க, பிற மதகுகள் வழியாக 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் ஆற்றில் தண்ணீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 30-ம் தேதி காலை, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் முருகு சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தலைமைப் பொறியாளர் கூறும்போது, ‘‘அதிக நீர் உந்துதல் அல்லது ஏதாவது அதிக எடை கொண்ட பொருள் மோதி விரிசல் ஏற்பட்டிருக்கலாம். உடைப்புக்கான காரணம் ஆய்வுக்குப் பிறகே தெரியவரும்’’ என்றார்.

இதனிடையே அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த 1.55 டிஎம்சி தண்ணீரில், 1.40 டிஎம்சி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டு, சாத்தனூர் அணை வழியாக கடலில் கலந்தது. நீர்மட்டம் 32 அடியாக குறைந்த பின்னர், கடந்த 4-ம் தேதி முதல் உடைந்த மதகு ஷட்டரை அகற்றும் பணி நடந்து வருகிறது. இரும்பு ஷட்டரை காஸ் வெல்டிங் மூலம் அகற்றி வருகின்றனர்.

பொறியாளர்கள் பணியிடை நீக்கம்

அணை மதகு ஷட்டர் உடைந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக, பாமக மற்றும் விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஏற்கெனவே ஒரு பொறியாளர் இடை நீக்கம் நீக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அணை உதவி செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவி பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அணை மதகு ஷட்டர் உடைந்ததற்கான உண்மையான காரணம் குறித்து பொதுப்பணித் துறையினர் தெரிவிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கங்கள், அரசியல் கட்சியினர் கோரிக்கை எழுப்பியுள்ளனர். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கூறும்போது, ‘‘120 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டில் ஏற்பட்ட கடும் வறட்சியின் போதுகூட அணையில் 37 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அணையில் இருந்து 1.40 டிஎம்சி தண்ணீர் வீணாக வெளியேற்றப்பட்டு, ஒரு பகுதி வறண்டு காட்சியளிக்கிறது. தற்போது, நீர்மட்டம் 32 அடியாக குறைந்ததால் 2-ம் போக சாகுபடிக்கு கடைமடை வரை தண்ணீர் கிடைப்பது சந்தேகம். சாகுபடி பாதிக்கப்பட்டால் ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்றார்.

பாசன விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர் வீரபத்திரன் கூறும்போது, ‘‘உரிய பராமரிப்பு, கண்காணிப்பு இல்லாமல் போனதே உடைப்புக்கான காரணம்’’ என்றார்.

கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினர் செங்குட்டுவன் கூறும்போது, ‘‘மதகுகளைப் பராமரிக்க ஒதுக்கப்பட்ட தொகை முறையாக செலவிடப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் அணையை நேரில் ஆய்வு மேற்கொண்டு உறுதித்தன்மை சான்றிதழ் வழங்க வேண்டும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஆய்வு மேற்கொள்ளப்படாமல் உறுதித்தன்மை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அணை மதகு ஷட்டர் உடைந்த சம்பவத்துக்கான உண்மையான காரணத்தை தெரிவித்து, சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும்’’ என்றார்.

வெள்ளை அறிக்கை

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத்தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், ‘‘எண்ணேகொல்புதூர் - தும்பலஅள்ளி கால்வாய் திட்டம் உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்தியிருந்தால், அணை மதகு ஷட்டர் உடைந்து வீணாகிப்போன தண்ணீரை சேமித்திருக்கலாம். அவற்றை நிறைவேற்றாததால் தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. அணையின் மதகு உடைய என்ன காரணம்? அணையை பராமரிக்க எவ்வளவு செலவு செய்யப்பட்டது? அணை யில் இருந்து எவ்வளவு தண்ணீர் வெளியேறியுள்ளது? இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் எத்தனை பேர் என்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளும், தமிழக அரசும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x