Last Updated : 28 Sep, 2023 03:40 PM

4  

Published : 28 Sep 2023 03:40 PM
Last Updated : 28 Sep 2023 03:40 PM

நாய்களின் ராஜ்ஜியத்தில்... சென்னையில் பெருகிய நாய் தொல்லை - இரவுநேர வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல்!

படம்: ம.பிரபு

சென்னை: நகரமெங்கும் தெருநாய்கள் ஊர்வலமாக செல்வதால், இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் வீடு போய் சேர்வதற்குள் பாதி உயிர் போய்விடுவதாக தெரிவித்துள்ளனர்.

நன்றியுள்ள ஜீவன்களாகவும், வீட்டின் பாதுகாவலனாகவும் இருப்பதாலே பெரும்பாலானோர் நாய்களை வீடுகளில் வளர்ப்பதை விரும்புகின்றனர். வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் கட்டுபாட்டுடனும், உரியமுறையில் பாராமரிக்கப்பட்டும் வளர்ப்பதால் பெரியளவில் சமூக தொல்லைகள் இல்லை. ஆனால் தெரு நாய்கள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாததால், அங்கேயும் இங்கேயும் மனம் போல் சுற்றித் திரிகின்றன. உணவுக்கும் மாற்று இடப் பிரவேசத்தின்போதும் மற்ற நாய்களிடம் கடிபட்டும் சண்டையிட்டும் வாழ்கின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக தெருக்களில் வலம் வருகின்றன. தெருவுக்கு காவல் என்பதைத் தாண்டி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கின்றன.

சிறுவர்களையும் வாகனங்களையும் கூட்டமாக துரத்துவது சென்னை மாநகர தெருக்களில் அன்றாடம் அரங்கேறும் காட்சிகளாகும். தமிழகம் மட்டுமின்றி பெரும்பாலான மாநிலங்களிலும் இந்த நாய் தொல்லை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சியின் தெருக்கள் முழுவதும் நாய்களின் ஆட்சிதான். எல்லையை பாதுகாக்க கூட்டமாக அணிவகுப்பதும் அந்நிய படையெடுப்பாக வரும்இருசக்கர வாகன ஓட்டிகளை விரட்டுவதும் நாய்களின் ராஜ்ஜியத்தில் அன்றாடம் நடக்கும் பணியாகும்.

அதிகாலை நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி மேற்கொள்வோர், இரவு நேரம் வேலை முடித்து வீடு திரும்புவோர், ரயில்களில் இருந்து இறங்கி வீடுகளுக்கு செல்வோர், பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள், முதியோர் என தெருநாய்கள் பயமுறுத்தாதவர்கள் பாக்கி இல்லை.

அதுமட்டுமின்றி நள்ளிரவில் தெருநாய்களின் சண்டை சத்தம் இரவு நேர தூக்கத்தை கெடுத்துவிடுகின்றன. தெரு நாய் தொல்லைக்கும் புகார் அளிக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் கடந்த2008-ம் ஆண்டும் 1913 என்ற உதவி எண் தொடங்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

சென்னையில் வளசரவாக்கம், பள்ளிக்கரணை நாராயணபுரம், காமகோட்டி நகர், போரூர், சின்னமலை, பெசன்ட் நகர், சிட்லபாக்கம், மடிப்பாக்கம், சூளைமேடு, ராயப்பேட்டை, மேடவாக்கம் பாபு நகர், சேப்பாக்கம், பெரம்பூர் உட்பட பல்வேறு இடங்களில் நாய்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. மாநகராட்சியிடம் புகார் அளித்தும் பயன் இல்லை என நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.

சதீஷ்

இதுகுறித்து, நாய்களால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் கூறியதாவது: காரணோடை சதீஷ்: சென்னை முழுக்க நாய்கள் தொல்லைதான். எங்கு பார்த்தாலும் இரவு நேரங்களில் கும்பல் கும்பலாக நாய்கள் திரிகின்றன. இதனால் இருசக்கர வாகனத்தில் போகும்போது துரத்துவதும் வாடிக்கையாகி விட்டது. இந்த நேரங்களில் சுதாரிக்கவில்லை என்றால் நிச்சயம் விபத்துகளில் சிக்க நேரிடும். இந்த நாய்களுக்கு பயந்தே புதுப்புது வழிகளில் செல்ல வேண்டியுள்ளது. ஆனாலும் அங்கும் 2 நாய்கள் நிற்கின்றன.

மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து கூறும்போது, நாய்களுக்கு கருத்தடை செய்து விடுகிறோம் என்கின்றனர். ஆனாலும் தெருக்களில் திரியும் நாய்களின் எண்ணிக்கை கூடுகிறதே தவிர குறைவதில்லை. இதற்கு ஒரு தீர்வு நிச்சயம் காண வேண்டும்.

வளசரவாக்கத்தை சேர்ந்த பெண் ஒருவர்: அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும்போது அச்சத்துடனே செல்கிறேன். சில நேரங்களில் நடைபயணம் மேற்கொள்ளும்போது, நாய் துரத்துவதால் அதிலேயே படபடப்பு ஏற்பட்டு வியர்த்து விடுகிறது. தெருநாய்களை சமாளிக்க முடியவில்லை.

முகமது காசிம்

சின்னமலை முகமது காசிம்: ரங்கராஜபுரம் 5-வது தெருவில் வெறிபிடித்த சில நாய்கள் சர்வ சாதரணமாக சாலைகளில் திரிகின்றன. இதுவரை 5-க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளன. இதுகுறித்து மாநகராட்சியிடம் புகார் அளித்தும் பலன் இல்லை. பொன்னியம்மன் கோயில் தெருவில் ஒரு வீட்டுக்குள் புகுந்த தெருநாய்கள் அங்குள்ளவர்களை கடித்து ரகளை செய்துள்ளன.

கொரட்டூர்

ராம்சிவா

: சமீபத்தில் இரவு வேளையில் நாய் கூட்டம் ஒன்று திடீரென துரத்தியது. அதிர்ச்சியில் வேகமாக வண்டியை ஓட்டினேன். பயத்தால் பதற்றமாகிறது. மேலும் எங்கள் பகுதியில் 10 புதிய குட்டிகள் சுற்றி திரிகின்றன. 1913-ஐ அழைத்து அலுத்துப் போய்விட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தெரு நாய்களினால் ஏற்படும் சாலை விபத்தும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. உலகிலேயே இந்தியாவில் தான் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், ரேபிஸ் கடியால் ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2001-ம் ஆண்டுக்கு முன்புவரை பிடிக்கப்படும் தெருநாய்களை கொல்வதற்கு சட்டத்தில் இடமிருந்தது. அதன்பின் 1960-ல் உருவாக்கப்பட்ட விலங்குகள் வதை தடுப்பு சட்டம் மாற்றியமைக்கப்பட்டது.

ஜெ.ராதாகிருஷ்ணன்

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: சட்ட சிக்கலால் தெருநாய்களை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கிறது. நாய்களை கொல்ல கூடாது, கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்திலே விடவேண்டும் என்று சட்டம் சொல்கிறது. அதேபோல பிறந்து 7 மாதம் முதல் ஒரு வருடம் வரை நாயை கருத்தடை செய்யக் கூடாது எனவும் சட்டவிதிகள் கூறுகின்றன.

இவ்வாறு கருத்தடை செய்து விடப்படும் தெருநாய்களால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்றெல்லாம் கூறமுடியாது. தடுப்பூசி போடப்பட்ட நாய்கள் கடித்தாலும், மக்கள் தடுப்பூசி போட்டு தான் ஆக வேண்டும். இதில் தவறிவிடப்பட்டு, கருத்தடை செய்யாமல் விடப்படும் எந்தஒரு நாயும் சுமார் 6 முதல் 7 குட்டிகளை ஈனவாய்ப்புண்டு. இதனால் மீண்டும் அதே தெருக்களில் நாய்களின் கும்பல் பரவலாக சுற்றித் திரியும்.

கால்நடை பாதுகாப்பு ஆர்வலர்கள் சிலர் தெரு வோரங்களில் பட்டினியாக கிடக்கும் நாய்களுக்கு உணவை அளித்துவிட்டு, பெரும் நன்மை செய்துவிட்டதாக கருதி சென்றுவிடுகின்றனர். ஆனால் அதனால் அந்த தெருமக்கள் படும் அவஸ்தயை அவர்கள் உணருவதில்லை. வாகன ஓட்டிகளின் துன்பத்தை கண்டு கொள்வதில்லை.

உண்மையான கால்நடை ஆர்வலர்களாக இருந்தால், நாய்களை தத்தெடுத்து வளர்க்க முயற்சி செய்ய வேண்டும். இல்லையேல் பாதுகாத்து, பராமரித்து, நாய்களை செல்லப்பிராணியாக வளர்க்க விரும்புவோரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதில்லை.

இதுவரை சென்னை மாநகராட்சியில் மட்டும் 8 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் நாய்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. தற்போது சென்னையில் 3புதிய கருத்தடை மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் நாய்கள் துரத்தும் போது எப்போதும் பதட்டப்படாமல் இருக்க வேண்டும். நாய்கள் பதட்டத்தை உணரும் தன்மை கொண்டவை. வாகனத்தை மெதுவாக ஓட்டி செல்ல வேண்டும். இப்பிரச்சினையில் முழுமையான தீர்வு காண வேண்டுமானால் சட்டவிதிகளில் திருத்தம் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை மாநகராட்சியின் தெருக்கள் முழுவதும் நாய்களின் ஆதிக்கம்தான். எல்லையை பாதுகாக்க கூட்டமாக அணிவகுப்பதும் அந்நிய படையெடுப்பாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை விரட்டுவதும் நாய்களின் ராஜ்ஜியத்தில் அன்றாடம் நடக்கும் பணியாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x