Last Updated : 28 Sep, 2023 01:36 PM

1  

Published : 28 Sep 2023 01:36 PM
Last Updated : 28 Sep 2023 01:36 PM

புதுவையில் கர்ப்பிணிகளுக்கு விரைவில் ஊட்டச்சத்து பெட்டகம்: துணை நிலை ஆளுநர் தமிழிசை

தமிழிசை | கோப்புப் படம்

புதுச்சேரி: கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் தர முதல்வரிடம் சொல்லியுள்ளேன். கண்டிப்பாக கொடுக்கப்படும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். நான் காலையில் பழையதுதான் சாப்பிட்டேன் என்று மகளிரிடம் அவர் தெரிவித்தார்.

புதுச்சேரி ஜவகர் நகரில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் நடந்த சத்துணவு மாத விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை பங்கேற்று இன்று பேசியதாவது: "மருத்துவர் என்ற முறையில் அனைவருக்கும் ஊட்டச்சத்து தேவை என்று சொல்வேன். உலக சுகாதார நிறுவனம் கூறுவது, இந்திய பெண்களில் 70 சதவீதம் பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நன்கு சாப்பிட்டால் போதும். தினமும் முருங்கை கீரை உட்பட ஒரு கீரை, காய்கறிகள்,வாழைத் தண்டு, சுரைக் காய் சாப்பிட வேண்டும்.

விலை உயர்ந்ததுதான் சத்து என்று நினைக்காதீர்கள். கீரை, காய்கறிகளில் அதிக சத்து உள்ளது. ஆயிரம் ரூபாய் சத்து மாவை விட முருங்கை கீரையில் அதிக சத்து உள்ளது. காய்கறிகளில் ஊட்டச்சத்து உள்ளது. தமிழக, புதுச்சேரி உணவு பழக்கத்துக்கு இணையாக வேறு உணவு பழக்கம் இல்லை. சோற்றுடன் முதலில் பருப்பு நெய், அடுத்து சாம்பார், ரசம், மோர், காய்கறிகள் சாப்பிடுகிறோம். இது சரி விகித உணவு. நெய் நல்ல கொழுப்பு. பசுவிடம் இருந்து வரும் எதுவும் கெட்டது இல்லை. நல்ல பசும்பால் சாப்பிட்டால் யாரும் குண்டாக மாட்டார்கள்.

உலகிலேயே சாப்பிட்டு விட்டு செரிக்க ரசம் சாப்பிடுவது இங்கு மட்டும்தான், உலகில் எங்கும் கிடையாது. முன்னோர் நன்கு சிந்தித்துள்ளனர், கரோனா வந்தவுடன் சாப்பிட சொன்ன விஷயங்கள் அனைத்தும் ரசத்தில் உள்ளது. இது தமிழகம், புதுச்சேரி தாண்டி எங்கும் இல்லை. எல்லா சத்தும் இருந்தாலும் ஆர்டர் செய்து பீட்சா, பர்கர் சாப்பிடுகிறோம். நம் உணவை ஆர்டரா சாப்பிடாமல் ஆர்டர் போட்டு சாப்பிடுறோம். நம் உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச் சத்து பெட்டகம் தர முதல்வரிடம் சொல்லியுள்ளேன்.

கண்டிப்பாக கொடுக்கப்படும். பெண்கள் நன்றாக சாப்பிட வேண்டும். எதையாவது சாப்பிடக் கூடாது. ஊட்டச்சத்துடன் சாப்பிட வேண்டும். பெண்கள் சிறந்து இருக்க ஊட்டசத்து உணவு சாப்பிட வேண்டும். தியாகி போல் இருக்கக் கூடாது. அனைவரும் சாப்பிட்டு விட்டு மீதமுள்ளதை சாப்பிடக் கூடாது. பெண்கள் நன்றாக இருந்தால்தான் குடும்பத்தை காக்க முடியும். யார் என்ன சொன்னாலும் சரியாக சாப்பிடுங்கள்.
வீட்டையும், நாட்டையும் பார்க்க வேண்டும் என்பதால் ஊட்டச்சத்து உணவு சாப்பிடுங்கள். பெண்கள் ருசித்து மகிழ்ச்சியாக சாப்பிடுங்கள்.

காலையில் பழையதில் இருக்கும் ஊட்டச்சத்து எதிலும் இல்லை. நானும் காலையில் பழையதுதான் சாப்பிட்டேன். புதுமை பெண்ணாக இருந்தாலும் நான் சாப்பிடுவது பழையதுதான். பூரி, வடை காலையில் சாப்பிடுவதை தவிருங்கள். உப்பு, எண்ணெய் குறையுங்கள்"என்று குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் எம்எல்ஏ சிவசங்கர், துறை இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து ஜவகர் நகரில் ரூ.7 கோடியில்
நடக்கும் சாலை, பூங்கா அமையவுள்ள பணிகளையும் ஆளுநர் பார்வையிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x