Last Updated : 28 Sep, 2023 12:01 PM

4  

Published : 28 Sep 2023 12:01 PM
Last Updated : 28 Sep 2023 12:01 PM

''இனி எந்த நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை'' - கே.பி.முனுசாமி திட்டவட்டம்

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி

கிருஷ்ணகிரி: "இனி எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் அதிமுக உறுதியாக கூட்டணியில் இருக்காது. நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, 2026-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இருக்காது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "வரும் 25ம் தேதி, அதிமுக தலைமை அலுவலகத்தில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், ஏற்கெனவே எங்களுடன் கூட்டணியில் இருந்த, பாஜகவின் மாநிலத் தலைமை எங்கள் இயக்கத்தைப் பற்றியும், தலைவர்கள் பற்றியும் பல்வேறு விமர்சனங்கள் செய்த காரணத்தால், ஏற்கெனவே மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து விமர்சனம் செய்ததைக் கண்டித்து ஒரு கண்டனத் தீர்மானமே அதிமுக சார்பில் நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்தும், பாஜகவின் மாநிலத் தலைமை, பேரறிஞர் அண்ணா குறித்தும், கட்சியின் பொதுச் செயலாளர் குறித்தும் விமர்சனம் செய்தார். அந்த விமர்சனங்கள் அனைத்தும் உண்மைக்கு மாறான விமர்சனங்களாக இருந்ததால், தமிழகத்தில் உள்ள இரண்டு கோடி தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், ஊடக விவாதங்களில், நேரம் வரும்போது அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துவிடும் என்று கூறி மக்களை திசைத்திருப்ப முயற்சித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும், அதிமுக ஒரு நாடகம் நடத்திக் கொண்டிருப்பதாகவும், நேரம் வரும்போது பாஜகவுடன் இணைந்து விடுவார்கள் என்றும் கூறி இருக்கின்றனர். அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை வெளியேற்றிய உடன் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக அவர்கள் இதுபோல உளறி வருகின்றனர்.

அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை வெளியேற்றி ஏற்கெனவே அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி அமைத்து 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்போம்" என்றார்.

அதிமுக கூட்டணி ஆதரிக்கும் பிரதமர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "எங்களைப் பொறுத்தவரையில், தமிழக மக்கள்தான் எங்களுடைய எஜமானர்கள். தமிழக மக்கள்தான் எங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். அம்மக்களின் உரிமைகள், நலனைக் காப்பதற்காகவும், தேவையான நிதியை பெறவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.

எங்களைப் போலவே ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் என்ற கட்சி இருக்கிறது. அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் யாரை முன்னிறுத்தி நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறார். ஆந்திராவில் இருக்கும் இரண்டு கட்சிகள் யாரை நாடாளுமன்றத் தேர்தலில் முன்னிறுத்துகின்றனர். இண்டியா கூட்டணி என்று சொல்கிறார்களே, இந்த கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யாரை முன்னிறுத்தி வாக்குகளை சேகரிக்கின்றனர். எனவே, தமிழக மக்களுடைய நலனில் அக்கறைக் கொண்டு, எங்கள் குரல் நாடாளுமன்றத் தேர்தலில் ஒலிக்கும்" என்றார்.

பாஜக தேசிய தலைவர்கள் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை ஏதும் நடத்தினார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை வெளியேற்றி விட்டதாக ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றிவிட்டோம். இனி எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் அதிமுக உறுதியாக கூட்டணியில் இருக்காது. நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, 2026-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இருக்காது என்பதை அதிமுக சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏற்கனவே 2014-ம் ஆண்டு காவிரியில் தண்ணீர் பெறுவது தொடர்பாக அதிமுக எம்பிக்கள் 22 நாட்கள், நாடாளுமன்றத்தை செயல்படாமல் முடக்கினோம். எனவே 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை தமிழக மக்களின் நலனை முன்னிறுத்தி சந்திப்போம். அதிமுக கூட்டணியில் வலுவான கூட்டணி அமையும். இந்த கூட்டணியில் எந்த கட்சிகள் இணையும் என்பதை காலம் தான் முடிவு செய்யும். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளது. மேலும், 9 ஆண்டுகால பாஜக ஆட்சியின் நிறை, குறைகள் குறித்து பேசுவோம், என்று அவர் கூறினார். இந்நிகழ்வின் போது, அதிமுக எம்எல்ஏக்கள் கிருஷ்ணகிரி அசோக்குமார், ஊத்தங்கரை தமிழ்செல்வம், முன்னாள் எம் எல்-ஏக்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், முனி வெங்கடப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x