Published : 28 Sep 2023 06:36 AM
Last Updated : 28 Sep 2023 06:36 AM
தஞ்சாவூர்: காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, தேமுதிக சார்பில் தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது.
போராட்டத்தைத் தொடங்கி வைத்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், செய்தியாளர்களிடம் கூறியது: பாஜகவும் அதிமுகவும் பிரிந்து 2 நாட்களே ஆவதால் இதுகுறித்து பொறுத்திருந்து பார்ப்போம். அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது, நிரந்தர நண்பரும் கிடையாது. அந்த 2 கட்சிகளுக்கும் இடையே பிரச்சினை கிடையாது. 2 தலைவர்கள் இடையேதான் பிரச்சினை. கூட்டணி தொடர்பான விஷயத்தில் தேமுதிக உரிய நேரத்தில் நல்ல முடிவை எடுக்கும்.
காவிரி விவகாரத்தில் பல பிரதமர்கள், முதல்வர்கள் வந்தாலும், ஆட்சி மாறியதே தவிர, காட்சிகள் மாறவில்லை. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தமிழக முதல்வரும், பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர், அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்துச் சென்று, பிரதமரை சந்திக்க வைத்து காவிரி நீரை பெற்று தர வேண்டும்.
நாகையில் பயிர் கருகியதைக் கண்டு மாரடைப்பால் உயிரிழந்த விவசாயி மகளின் கல்விக்கு நிதியுதவியும், அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமானால், நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT