Published : 28 Sep 2023 06:41 AM
Last Updated : 28 Sep 2023 06:41 AM

கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான இருவரை கோவைக்கு அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது இத்ரீஸ், முகமது அசாருதீன் ஆகியோரை கோவை உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதிக்கு நேற்று விசாரணைக்காக அழைத்து வந்த என்ஐஏ அதிகாரிகள்.

கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை, காவலில் எடுத்த என்ஐஏ அதிகாரிகள் கோவைக்கு நேற்று அழைத்து வந்து விசாரித்தனர்.

கோவை உக்கடத்தை அடுத்த கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே, கடந்தாண்டு அக்.23-ம் தேதி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். போலீஸாரின் விசாரணையில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளரான முபின், மக்கள் கூடும் இடத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது.

பின்னர், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக முகமது தல்கா(25), முகமது அசாருதீன்(23), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில்(27), நவாஸ் இஸ்மாயில்(26), அப்சர்கான், முகமது தவுபீக்(25), உமர் பாரூக்(28), பெரோஸ்கான்(28), ஷேக் இதாயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 11 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது குற்றப்பத்திரிகை, துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன.

இவ்வழக்கு தொடர்பாக, கடந்த சில வாரங்களுக்கு முன்னர், உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த முகமது இத்ரீஸ் (25), உக்கடம் அன்பு நகரைச் சேர்ந்த முகமது அசாருதீன் (36) ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், முகமது அசாருதீன் ஐஎஸ் ஆதரவு வழக்கு தொடர்பாக முன்னரே கைது செய்யப்பட்டு கேரளா மாநில சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கார் வெடிப்பு வழக்கிலும் இவருக்கு தொடர்பு இருப்பதை அறிந்த என்ஐஏ அதிகாரிகள், சிறையில் அடைக்கப்பட்டிருந்த அசாருதீனை முறைப்படி மீண்டும் கைது செய்தனர்.

சமீபத்தில் கைது செய்யப்பட்ட முகமது இத்ரீஸ், முகமது அசாருதீன் ஆகியோரை கடந்த 22-ம் தேதி என்ஐஏ அதிகாரிகள் தங்களது காவலில் எடுத்தனர். தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு இருவரையும் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

சம்பவ இடங்களில் விசாரணை: அதன் பின்னர், இருவரையும் அழைத்துக் கொண்டு என்ஐஏ அதிகாரிகள் நேற்று கோவைக்கு வந்தனர். முகமது இத்ரிசை ஜி.எம்.நகரில் உள்ள அவரது வீட்டுக்கும், முகமது அசாருதீனை அன்பு நகரில் உள்ள அவரது வீட்டுக்கும் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

தொடர்ந்து இருவரையும் அவர்கள் படித்த அரபி பாடசாலைக்கு அழைத்துச் சென்றும், ரகசியமாக சந்தித்து பேசிய இடங்களுக்கு அழைத்துச் சென்றும் விசாரித்தனர். மேலும், விசாரணைக்கு அழைத்துச் சென்ற இடங்களை என்ஐஏ அதிகாரிகள் ஜிபிஎஸ் மூலம் தொழில்நுட்ப பதிவும் செய்தனர். சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x