Published : 28 Sep 2023 06:53 AM
Last Updated : 28 Sep 2023 06:53 AM

கோவையில் அரசு நிலத்தை அபகரித்து கட்டிடம் - அதிமுக எம்எல்ஏ, பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோவையில் அரசு நிலத்தை அபகரித்து கட்டிடம் கட்டியுள்ள சிங்காநல்லூர் அதிமுக எம்எல்ஏ மற்றும் கோவை மாவட்ட பாஜக தலைவர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை மேற்கொண்டு, அரசு நிலத்தை மீட்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை விளாங்குறிச்சியில் கொடிசியா அருகே ரூ.230 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் 82 சென்ட் நிலம் கோவிந்தசாமி என்பவரிடமிருந்து மீட்கப்பட்டு, நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் உபரி நிலங்களாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசின் இந்த உத்தரவை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்த நிலத்துக்கு தங்களது பெயர்களில் பட்டா வழங்கக் கோரி கோவிந்தசாமியின் வாரிசுதாரர்களான சிவராஜ், பாலாஜி மற்றும் கிரீன் வேல்யூ ஷெல்டர்ஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, அந்த நிலத்தை மீட்குமாறு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆர்.ரமன்லால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அந்த நிலம் மீட்கப்பட்டு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது என்றும், ஆனால் மீண்டும் களஆய்வு செய்தபோது அந்த நிலத்தில் சிங்காநல்லூர் அதிமுக எம்எல்ஏ கே.ஆர்.ஜெயராம் மற்றும் கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோர் பல வீடுகளைக் கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அரசு நிலத்தை அவர்களின் பெயர்களுக்கு சட்டவிரோதமாக மாற்றம் செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அதையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் கூட்டணி அமைத்து, திட்டமிட்டு அரசு நிலங்களை அபகரிப்பதும், விதிமீறல்களில் ஈடுபட்டு கட்டுமானங்களை மேற்கொள்வதும் சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.

நாடு முழுவதும் உள்ள அரசு நிலங்களை பெரிய அளவில் அபகரிப்பவர்கள், சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களாக உள்ளனர். இதில் நீதிமன்றங்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், சமூக நீதியின் கோட்பாடுகளும், அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள ஜனநாயகமும் நீர்த்துப் போய்விடும்.

அரசியல்வாதிகள், அதிகாரிகள்..: நிலங்களின் சந்தை மதிப்பு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதால், அரசு நிலங்களை அபகரிப்பதில் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மற்றும் தனி நபர்களுக்கு இடையிலான கூட்டணி முக்கியப் பங்கு வகிக்கிறது.

இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுபவர்கள் எவ்வளவு பெரிய பதவிகளில் இருந்தாலும் தப்ப முடியாது. குறிப்பாக, பொது ஊழியர்கள் அரசு நிலங்களை அபகரிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே, தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, அரசு நிலங்களை மீட்க வேண்டும்.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக நில நிர்வாக ஆணையர் தக்க நடவடிக்கை மேற்கொண்டு, அந்த நிலம் மற்றும் கட்டுமானங்களை மீட்டு, அதை பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

அங்கு சட்டவிரோதமாக குடியிருப்போரை 4 வாரங்களில் அப்புறப்படுத்தி, அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் நவ. 4-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x