Published : 27 Sep 2023 09:02 PM
Last Updated : 27 Sep 2023 09:02 PM
கிருஷ்ணகிரி: இதயம் செயலிழந்த நிலையில், ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு, 35 நாட்கள் செயற்கை சுவாசம் கொடுத்து சிகிச்சைகள் அளித்து கிருஷ்ணகிரி அரசு மகப்பேறு மருத்துவமனை மருத்துவர்கள், அவரின் உயிரை காப்பாற்றினர்.
இது குறித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பூவதி கூறியது: “கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம் தேவகானப்பள்ளியை சேர்ந்தவர் சபீரா (26). கர்ப்பிணியான இவருக்கு கர்ப்பக் கால வலிப்பு நோயுடன் உயர் ரத்த அழுத்தம், ரத்தசோகையும் இருந்துள்ளது. ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற இவருக்கு கடந்த ஜூலை மாதம் 9-ம் தேதி, உடல்நிலை மோசமானது.
இதையடுத்து உயர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி காந்திசாலையில் அமைந்து அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று அதிகாலை, 3 மணியளவில் அவருக்கு சுயநினைவே இல்லை. இதய செயலிழப்பும் ஏற்பட்டது. உடனடியாக உயிர் காக்கும் முதலுதவியுடன் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. பின்னர், காலை, 6.30 மணிக்கு, 30 வார வளர்ச்சியுடன், 750 கிராம் எடையுடன் இறந்த நிலையில் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர்.
சபீராவுக்கு தொடர் செயற்கை சுவாசம் தேவைப்பட்டதால், டிரக்கியாஸ்டமியும் செய்யப்பட்டது. தொடர்ந்து, 35 நாட்களுக்கு எந்த அசைவும் இல்லாமல் இருந்த அவர், அதன் பின் முன்னேற்றமடைந்து சுவாசிக்க தொடங்கி, தற்போது நலமுடன் உள்ளார்.
இதேபோல், காவேரிப்பட்டணத்தை சேர்ந்த சோனியா (25) என்கிற கர்ப்பிணி பெண்ணுக்கு அதிக ரத்தப்போக்கால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கும் 55 யூனிட் ரத்த மூலக்கூறுகள் செலுத்தப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. 2 நாட்களில் உடல்நலம் சீராகி கடந்த 3-ம் தேதி, சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது” என்று அவர் கூறினார்.
மேலும், சபீராவை, கண்காணித்து, மருத்துக்கல்லூரி முதல்வர் பூவதி தலைமையில், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வி மற்றும் மருத்துவர்கள் வசந்தகுமார், சிவமஞ்சு, உதயராணி, நவீனாஸ்ரீ, முத்தமிழ், இளம்பரிதி, மஞ்சித் அடங்கிய குழுவினர் சிகிச்சையளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT