Published : 27 Sep 2023 04:53 PM
Last Updated : 27 Sep 2023 04:53 PM

‘காவிரி எங்கள் உரிமை’ முழக்கத்துடன் செப்.30-ல் ஆளுநர் மாளிகை முற்றுகை: தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவிப்பு

சென்னை: தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் வரும் செப்டம்பர் 30-ம் தேதி 'காவிரி எங்கள் உரிமை' என்ற முழக்கத்துடன் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காவிரி ஆணையம் கூறிய மிகமிகச் சிறிதளவு தண்ணீரான நொடிக்கு 5000 கனஅடி தண்ணீரைத் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் 21.9.2023 அன்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடகாவில் பரவலாக கன்னட அமைப்புகளும், உழவர் சங்கங்களும் பல வகையான போராட்டங்கள் நடத்தி வருகின்றன. குறிப்பாக, காவிரி விவகாரத்தில், காங்கிரஸ், பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய முப்பெரும் எதிர்க்கட்சிகளும் ஒற்றைப் புள்ளியில் நின்று, தமிழ்நாட்டுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

கன்னட சலுவாலி என்ற அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராசும், கர்நாடகா ரக்சனா வேதிகே அமைப்பின் தலைவரான நாராயண கவுடாவும், கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு எதிராக கன்னடர்களை தூண்டி வருகிறார்கள். "எங்களது காவிரி எங்களது உரிமை" என்ற முழக்கத்தை வைத்து, கர்நாடகாவில் உள்ள முன்னணி நடிகர்களான கிச்சா சுதீப், தர்ஷன் தொகுதீபா உள்ளிட்ட பலரும், அம்மாநிலத்து ஆதரவாக நிற்கின்றனர். கன்னட அமைப்பினர் நடத்திய போராட்டத்தில், 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் அரசுப் பிரதிநிதியாக இருக்கும், தமிழக முதல்வரின் படத்தை கிழித்து எறிந்திருக்கிறார்கள். அதோடு நில்லாமல், தமிழ்நாடு முதலமைச்சரின் உருவப்படத்தை முன் வைத்து, இறுதிச்சடங்குகள் செய்து அவமதித்துள்ளனர்.

பெங்களூரில் உள்ள தமிழர்கள் வெளியேற வேண்டும் என்றும் அவர்களை மு.க.ஸ்டாலின் அழைத்துச் செல்ல வேண்டும் என்று வாட்டாள் நாகராசு ஆவேசமாக கூறியுள்ளார். அதோடு, பெங்களூரில் உள்ள தமிழர்கள் தண்ணீர் குடிக்கக் கூடாது, அது கன்னடர்களின் தண்ணீர் என்றும் பேசியுள்ளார். கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.

எக்காலத்திலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்ற நிதர்சன உண்மையை புரிந்துகொண்ட பாஜக மோடி அரசு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை சரிந்து விடுமோ என்ற அச்சத்தில், ஒன்றியத்தில் வழக்கம் போல் வாய்மூடி மௌனம் காக்கிறது. காவிரி ஆணையத்தின் பரிந்துரையையும் கர்நாடக அரசு செயல்படுத்த போவதில்லை. ஏற்கெனவே ஒரு தடவை கூட காவிரி ஆணையத்தின் பரிந்துரையை கர்நாடகம் செயல்படுத்தியதும் இல்லை. அதன்மீது காவிரி ஆணையமும் மோடி அரசும் எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுப்பதில்லை. காவிரி ஆணையத்தால் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு பலனும் இல்லை; தமிழ்நாட்டுக்கு சட்டப்படி கர்நாடகம் தரவேண்டிய காவிரி பங்கு நீரை, மோடி அரசும் பெற்றுத்தர முடியவில்லை; இனிமே பெற்று தர போவதில்லை.

ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆண்டாலும், பாஜக ஆண்டாலும் சரி; கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆண்டாலும், பாஜக ஆண்டாலும் சரி. அவர்களை பொறுத்தவரை, தமிழர்கள் ஏமாளிகள்; இளிச்சவாயர்கள் என்பதே மன ஓட்டம்.

எனவே, காவிரி எங்கள் உரிமை என்ற முழக்கத்தை முன் வைத்தும், தமிழ்நாடு அரசையும், முதலமைச்சரையும் கன்னட அமைப்புகள் அவமதித்ததை கண்டித்தும், செப்டம்பர் 30ஆம் தேதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் பேரணியை முன்னெடுப்பதோடு, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுரிமையை காக்க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கும் இந்த அறப்போராட்டத்தில், ஜனநாயக கட்சிகளும், அமைப்புகளும், விவசாய சங்கங்களும் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்'' என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x