Published : 27 Sep 2023 04:19 PM
Last Updated : 27 Sep 2023 04:19 PM
மதுரை: 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தல் நேரத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் நெருங்கியபோதிலும் இன்னமும் கட்டுமானப் தொடங்கவில்லை என தென் மாவட்ட மக்கள் வேதனையில் உள்ளனர்.
2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி, மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். சர்வதேச தரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்கும் என தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட போதிலும் ‘எய்ம்ஸ்’ இன்னும் தொடங்கப்படவில்லை.
கட்டுமானப் பணியே தொடங்காத மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு குழு அமைத்து கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ‘ப்ரீ’ டெண்டர் விட்டு, மதுரை ‘எய்ம்ஸ்’ விவகாரத்தில் மீண்டும் மத்திய அரசு ‘கண்ணாமூச்சி’ ஆட்டத்தை தொடங்கி உள்ளது. இதுபோல், ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் மதுரை ‘எய்ம்ஸ்’ திட்டத்தை வைத்து கட்சியினர் அரசியல் செய்து வருகின்றனர்.
கடந்த தேர்தல் நேரத்தில் அதிமுக ஆட்சியில் ‘எய்ம்ஸ்’ தொடங்காவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அப்போதைய அமைச்சர் ஆர்பி.உதயகுமார் அறிவித்திருந்தார். மதுரை ஒத்தக்கடையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்ததும் ‘எய்ம்ஸ்’ கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என உறுதி அளித்தார்.
அப்போதைய தேர்தலில் பிரச்சாரம் செய்த உதயநிதி, ஒற்றை செங்கல்லை ஊர் ஊராக காட்டி எய்ம்ஸ் எங்கே எனக் கேள்வி எழுப்பி பிரச்சாரம் செய்தார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்கும் எனக் கூறினார்.
இந்நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு கடந்தநிலையிலும் இன்னும் எய்ம்ஸ் கட்டுமானப் பணி தொடங்கப்படவில்லை. பதிலுக்கு தற்போது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கடந்த வாரம் மதுரைக்கு உதயநிதி வந்தபோது, அதே செங்கல்லை காட்டி, ‘‘நீங்களாவது ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை கொண்டு வாருங்கள், ’’ என்றார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா, ‘‘எய்ம்ஸ் விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது. மக்களுக்கு தவறான தகவல்களை பரப்பு கிறது. மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவக்கல்லூரி தொடங்கிவிட்டது. உள்கட்டமைப்பு மட்டுமே நிறுவப்படவில்லை, ’’ என்றார்.
அதற்கு தமிழக சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன், ‘‘மதுரை ‘எய்ம்ஸ்’ கட்டுமானத்துக்கு ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் கடன் கொடுக்கத் தயாராக இருந்தும், அதைக்கேட்டுப் பெற மத்திய அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. அதே ஜைக்கா நிறுவனத்திடம் தமிழக அரசு பல நூறு கோடி ரூபாய் கடன் பெற்று மதுரை, சென்னை உள்பட பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் கட்டிடங்கள் கட்டி வருகிறோம்’’ என்றார்.
திமுக, அதிமுக, பாஜக, ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே நடக்கும் ‘பரமபத' அரசியலால், ‘எய்ம்ஸ்’ பற்றிய உண்மை நிலவரம் தற்போது வரை தெரியவில்லை. தென் தமிழக மக்கள் பலன் அடையும் வகையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என மக்கள் போராடிய நிலையில், 2015-ம் ஆண்டு அப்போதைய மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அவர் அறிவித்து 8 ஆண்டுகள் முடிந்தநிலையில் ‘எய்ம்ஸ்’க்கு ஒதுக்கிய இடம் புதர் மண்டிக்கிடக்கிறது.
இதுகுறித்து குறித்து ‘எய்ம்ஸ்’ ஆர்டிஐ ஆர்வலர் பாண்டியராஜா கூறுகையில், மதுரை எய்ம்ஸ் சம்பந்தமாக ஆர்டிஐ யில் எப்படி கேள்வி கேட்டாலும் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு இதுவரை பதிலே கிடையாது. ஆனால் 2026-ல் முடிந்து விடும் என்ற பதில் மட்டுமே இதுவரைக்கும் கிடைத்துள்ளது. மதுரை எய்ம்ஸ் தொடர்பாக ஒவ்வொரு மாதமும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த வேண்டும். எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்குவது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.
அப்போதுதான் பொதுமக்களின் சந்தேகம் விலகும். தற்போதைய நிலையை பார்க்கும்போது எய்ம்ஸ் மேலும் தாமதம் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே மத்திய அரசு உடனடியாக கட்டுமான நிறுவனத்தை இறுதி செய்து பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT