Published : 27 Sep 2023 03:13 PM
Last Updated : 27 Sep 2023 03:13 PM
சென்னை: கோவையில் அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில் சிங்காநல்லூர் அதிமுக எம்எல்ஏ கே.ஆர்.ஜெயராம், பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் விளாங்குறிச்சி கிராமத்தில் 45 ஏக்கர் 82 சென்ட் நிலத்தை கோவிந்தசாமி என்பவரிடமிருந்து நில சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் உபரி நிலங்களாக அறிவித்த அரசு உத்தரவை, உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இந்நிலையில், கோவிந்தசாமியின் மனைவி அளித்த மனுவின் அடிப்படையில் பட்டா வழங்க தாசில்தார் உத்தரவு பிறப்பித்த நிலையில், அதை வருவாய் கோட்ட ஆட்சியர் ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவரது வாரிசுகள் சிவராஜ், பாலாஜி, கிரீன் வேல்யூ ஷெல்டர்ஸ் நிறுவனம் ஆகியோர் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், நிலத்தை மீட்க உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராமன் லால், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நிலம் மீட்கப்பட்டது. அதன்பின்னர் நேரில் சென்று மீண்டும் ஆய்வு செய்தபோது, அங்கு சிங்காநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.ஆர்.ஜெயராம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோர் பல கட்டுமானங்களை ஏற்படுத்தி உள்ளது தெரியவந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அரசு நிலத்தில் சட்டவிரோதமாக குடியிருந்தவர்கள், அந்த நிலத்தை மற்றவர்களின் பெயருக்கு மாற்றி உள்ளனர். இது அழுத்தத்தின் காரணமாக நடைபெற்றதா அல்லது அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து செயல்பட்டார்களா என விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். அரசு நிலம் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டு, மோசடியாக பெயர் மாற்றம் செய்யபட்டு உள்ளது. நிலத்தில் சட்டவிரோதமாக குடியிருந்தவர்கள், அதன்பின்னர் அவற்றில் கட்டுமானங்களை மேற்கொண்டவர்கள் உள்ளிட்டோர் எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும், அவர்கள் தப்பிக்க அனுமதிக்க முடியாது.
திட்டமிட்டு நிலத்தை அபகரிப்பது அதிகரித்து வருகிறது. பொது ஊழியர் என்ற பெயரில் அரசு சொத்தை அபகரிப்பதை அனுமதிக்க முடியாது. சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வழக்குப் பதிவு செய்து குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்பட வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை நிலத்தையும், கட்டடத்தையும் மீட்டு, பொதுப் பயன்பாட்டுக்கு தமிழக அரசு பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக குடியிருப்போரை 4 வாரங்களில் அப்புறப்படுத்தி, அதுகுறித்த அறிக்கையை நவம்பர் 4-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT