Published : 27 Sep 2023 02:40 PM
Last Updated : 27 Sep 2023 02:40 PM
மதுரை: தமிழக அரசின் 12 மணி நேர வேலைத் திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்பு 12 மணி நேர வேலை சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பாக திடீர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் போனிபாஸ் உள்ளிட்ட 26 பேர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
அதில், இந்த வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் அவசரம் அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கால் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் பலர் வேலைக்குச் செல்வதிலும், வெளிநாடுகளுக்குச் செல்ல பாஸ்போர்ட் பெறுவதிலும், வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதிலும் பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். எனவே, வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி நாகார்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் வழக்கறிஞர் வாதிடுகையில், தமிழக அரசின் 12 மணி நேர வேலை சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. பின்னர், அந்தச் சட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற்றுக் கொண்டது. ஆனால், மாணவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவசரம் அவசரமாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர் என்றார்.
இதைப் பதிவு செய்துகொண்டு மனுதாரர்கள் மீதான போராட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT