Published : 27 Sep 2023 05:28 AM
Last Updated : 27 Sep 2023 05:28 AM
சென்னை: வருமான வரித் துறையின் ஊழல்தடுப்பு, கண்காணிப்பு பிரிவு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னை ராயப்பேட்டையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு குறித்த ஆலோசனைகூட்டம் நேற்று நடந்தது. பேரமைப்பின் சென்னை மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம் தலைமை தாங்கினார். மாநில தலைமை செயலாளர் ஆர்.ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.
இதில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (விழிப்புணர்வு) தென்மண்டல கூடுதல் பொது இயக்குநர் ஸவப்னா நாணு அம்பட் பேசியதாவது: மறைந்த சர்தார் வல்லபபாய் பட்டேல் பிறந்தநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஊழல் தொடர்பாக பெறப்படும் புகார்களில் பெரும்பாலானவை போலியாகவே இருக்கும் என்பதால், அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டியது வருமான வரித் துறையின் முதல்கட்ட நடவடிக்கை.
மேலும், ஊழல் குறித்து புகார் அளிப்பவரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. எனவே, அதை தடுக்கும் வகையில், தற்போது ‘பிட்பி’ (PIDPI) எனப்படும் ‘பொது நலன் வெளிப்படுத்துதல் மற்றும் தகவல் தருவோரின் பாதுகாப்பு’ என்கிற முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, புகார் அளிப்பவர் அஞ்சல் மூலமாக புகாரை எழுதி, உறையின் மீது பெயர், முகவரி எதுவும் இல்லாமல், ‘பொதுநலன் வெளிப்பாட்டின்கீழ் புகார்’ என்று மட்டும் குறிப்பிட்டு தபாலை அனுப்ப வேண்டும். உள்ளே கடிதத்தில், டெல்லியில் உள்ள மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையகத்தின் செயலருக்கு புகார் எழுதி, ஏதேனும் ஓர் இடத்தில் மட்டும் தங்களது பெயர், முகவரியை குறிப்பிட்டால் போதும். இதன்மூலம் புகார் அளிப்பவரின் உரிமை, அடையாளம் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT