Published : 27 Sep 2023 06:05 AM
Last Updated : 27 Sep 2023 06:05 AM
புதுடெல்லி: தமிழகத்தில் ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனத்தில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஓராண்டு பயிற்சி முடித்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அடிப்படையில் அர்ச்சகர்கள், ஓதுவார்கள் நியமனம் தொடர்பாக அறநிலையத் துறை புதிய விதிகளைக் கொண்டு வந்தது. இதுதொடர்பாக தமிழக அரசும் அரசாணை பிறப்பித்தது.
இதை எதிர்த்து அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் பி.எஸ்.ஆர்.முத்துக்குமார் சிவாச்சாரியார் மற்றும் ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவரான டி.ஆர்.ரமேஷ் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.
அதில், தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு கடந்த 2021-ம் ஆண்டு ஜூலையில் அறிவிப்பு வெளியிட்டது. ஆகம விதிகளின்படி செயல்படும் தமிழக கோயில்களில் உள்ள இந்த பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, அர்ச்சகர் பணிக்கான ஓராண்டு சான்றிதழ் படிப்பு முடித்தவர்கள் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயில்களை எங்கு அமைப்பது, எப்படி அமைப்பது, பிரதான கடவுளுக்கான சந்நிதி, பரிவார மூர்த்திகளுக்கான சந்நிதி, அன்றாட பூஜை மற்றும் வழிபாட்டு முறைகள், சாத்துப்படி, நைவேத்யம், கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட கோயில்களின் மரபுசார்ந்த அனைத்தும் ஆகம விதிகளின்படியே நடைபெற்று வருகிறது.
இந்த ஆகம விதிகளை முழுமனதுடன் முறையாகக் கற்று, தொழில் ரீதியாகப் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்டுள்ள கோயில்களில் அர்ச்சகர்களாகவோ, ஓதுவார்களாகவோ முடியும். எனவே தமிழக அரசின் புதிய விதிகள் மற்றும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என அதில் கோரியிருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2022-ம் ஆண்டு பிறப்பித்த தீர்ப்பில், கோயில்களில் அர்ச்சகர்கள் பணி நியமனம் தொடர்பாக அரசு கொண்டு வந்துள்ள விதிகள் செல்லும் என்றாலும் ஆகம விதிகளை முறையாகப் பின்பற்றும் மற்றும் ஆகம விதிகளின்படி கட்டப்பட்டுள்ள கோயில்களில் ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் எந்தெந்த கோயில்களில் ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுகிறது என்பதைக் கண்டறிய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சொக்கலிங்கம் தலைமையில் கமிட்டி அமைத்தும் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களின் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதால், இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா தலைமையிலான அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் பி.வள்ளியப்பன், ஜி.பாலாஜி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அதையடுத்து நீதிபதிகள், தமிழகத்தில் ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனத்தில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும். ஆகம விதிகளுக்குப் புறம்பாக புதிய நியமனங்களையோ அல்லது இடமாறுதல் உத்தரவுகளையோ பிறப்பிக்கக் கூடாது என இடைக்கால தடை பிறப்பித்துள்ளனர்.
மேலும், இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் அறநிலையத் துறை 3 வாரங்களில் பதில் அளிக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT