Published : 27 Sep 2023 06:05 AM
Last Updated : 27 Sep 2023 06:05 AM
சென்னை: அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பா.பொன்னையா, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11 மணிக்கு நடத்த வேண்டும்.
குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராமசபைக்கூட்டம் நடைபெற உள்ள இடம், நேரம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
கிராமசபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்த ஒரு வளாகத்திலும் நடத்தக்கூடாது. கிராமசபைக் கூட்டத்துக்கான செலவின வரம்புரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. கிராம சபைக்கூட்ட நிகழ்வுகளை அதற்கான செயலியில் உள்ளீடு செய்து அக். 2-ம் தேதியே ஊரக வளர்ச்சி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விவாதிக்க வேண்டியவை: கிராமசபைக் கூட்டத்தில், கிராமஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், திட்டப் பணிகள் குறித்து விவாதிக்க வேண்டும். கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறப்பட வேண்டும். மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தும் நடவடிக்கை, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம், பிரதமர் ஊரக குடியிருப்பு திட்டம், காசநோய் இல்லாத கிராமமாக அறிவிப்பு செய்தல் உள்ளிட்டவை தொடர்பாக விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதுதவிர, மக்கள் திட்டமிடல் இயக்கத்தின்கீழ், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment