Published : 11 Dec 2017 10:13 AM
Last Updated : 11 Dec 2017 10:13 AM
‘ஒக்கி’ புயலில் சிக்கி குமரி மாவட்டம், நீரோடி கிராமத்தில் மட்டும் 36 மீனவர்கள் இறந்துள்ளதாக பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், கடலோர காவல் படையினர் அங்கு முகாமிட்டு விவரம் சேகரிக்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர், நீரோடி, வல்லவிளை சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற ஏராளமான மீனவர்கள் ஒக்கி புயல் தாக்குதலுக்கு பிறகு இதுவரை கரை திரும்பவில்லை. மத்திய, மாநில அரசுகள் சார்பில் இம்மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
பதாகையால் பரபரப்பு
நீரோடி கிராமத்தில் மட்டும் 48 பேர் இதுவரை கரை திரும்பவில்லை என அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இவர்களில் 36 பேர் இறந்துவிட்டதாக குறிப்பிட்டு, அவர்களது புகைப்படம், பெயர் பட்டியலுடன் அங்குள்ள தேவாலயம் முன்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது. அக்கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து நீரோடி புனித நிக்கோலஸ் தேவாலய பங்குத் தந்தை லூசியன்ஸ் தாமஸ் கூறும்போது, ‘‘நீரோடி கிராமத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீன் பிடிக்கச் சென்றிருந்த நிலையில், ஒக்கி புயலில் சிக்கி ஒரு விசைப்படகும், 6 தங்கல் வள்ளங்களும் கவிழ்ந்துள்ளன. இவற்றிலிருந்த 60-க்கும் மேற்பட்ட மீனவர்களில் சிலர் மட்டும் நீந்தி, அந்த வழியாக வந்த பிற மீனவர்களின் படகுகளில் ஏறி கரை சேர்ந்துள்ளனர். தங்களுடன் வந்த 36 பேர் கண் எதிரே கடலில் மூழ்கி இறந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவர்களைத் தவிர 12 பேர் மாயமாகியுள்ளனர். குமரி மாவட்டத்திலிருந்து கடலுக்கு செல்லும் மீனவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட டிசம்பர் 20-ம் தேதி வாக்கில் திரும்பி வந்து விடுவார்கள். இதேபோல், மாயமான 12 பேரும் திரும்பி வந்து விட மாட்டார்களா என்ற ஏக்கத்தோடு காத்திருக்கிறோம்” என்றார் அவர்.
கடலோர காவல்படை முகாம்
கடலோர காவல் படை அதிகாரிகள் நீரோடி கிராமத்தில் முகாமிட்டு மாயமான மீனவர்களின் பட்டியல், பெயர், புகைப்படம் ஆகியவற்றை சேகரித்து வருகின்றனர். இதன் முடிவில் மாயமானவர்கள் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட உள்ளதாகவும், மாயமான மீனவர்கள் 7 ஆண்டுகளுக்கு பின்னரே இறந்ததாக அரசால் அறிவிக்கப்படும் நிலையில், பேரிடராக இருப்பதால் இதற்கான கால அளவை குறைத்து, இறப்பு குறித்து அறிவிக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT