Published : 12 Dec 2017 09:39 AM
Last Updated : 12 Dec 2017 09:39 AM
ஆர்.கே.நகர் தொகுதியில் பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை விட்டு சென்னை குடிநீர் வாரியம் மாசுபடுத்தி வருகிறது. இதை சென்னை மாநகராட்சியும் கண்டுகொள்ளாததால் அத்தொகுதி மக்கள் கடும் சுகாதாரக்கேட்டுக்கு ஆளாகி வருகின்றனர்.
சென்னையில் நாள்தோறும் 950 மில்லியன் லிட்டர் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. அதை சென்னை குடிநீர் வாரியத்தின் 196 கழிவுநீரேற்று நிலையங்கள் மூல மாக கொடுங்கையூர் உள்ளிட்ட 12 இடங்களில் இயங்கும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரித்து, பின்னர் நீர் வழிப் பாதைகளிலோ, தொழிற்சாலை பயன்பாட்டுக்கோ வழங்க வேண்டும்.
ஆனால் சென்னை குடிநீர் வாரியத்தில் அதிகபட்சமாக நாளொன்றுக்கு 764 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் அளவுக்கு தான் கட்டமைப்புகள் உள்ளன. அதனால் மிகை கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல், விதிகளை மீறி நீர்வழிப்பாதைகளில் விடப்படு கிறது. கழிவுநீரைச் சுத்திகரிக்க போதிய கட்டமைப்பு இல்லாததால் தெருக்களில் உறிஞ்சப்படும் கழிவுநீர் கூட, சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டுசெல்லாமல், நீர்வழிப் பாதைகளிலும், சென்னை மாநகராட்சியின் மழை நீர் வடிகாலிலும் விடப்படுகிறது.
ஆர்.கே.நகர் தொகுதியிலும் அதே நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்தொகுதிக்கு உட்பட்ட எழில் நகர் மற்றும் நாவலர் நகர் இடையே பக்கிங்ஹாம் கால்வாய் செல்கிறது. அப்பகுதியில் உள்ள சென்னை குடிநீர் வாரிய கழிவுநீரேற்று நிலையம் மூலமாக தினமும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் பக்கிங் ஹாம் கால்வாயில் விடப்படுகிறது. அதனால் அப்பகுதி மட்டுமல்லாது அத்தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட இளைய தெரு பகுதியில் சென்னை குடிநீர் வாரிய கழிவு நீரேற்ற நிலையம் இயங்கி வரு கிறது. அங்கிருந்து சுமார் 20 அடி தொலைவில் கழிவுநீர் குழாய் உள்ளது. தனியார் கழிவுநீர் லாரிகள் அனைத்தும் அந்த கழிவு நீர் குழாய் மூடியை திறந்து முறைப்படி கழிவுநீரை வெளியேற்றுகின்றன. ஆனால் குடிநீர் வாரிய கழிவுநீர் லாரிகள், அதே சாலையில் உள்ள சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகாலில் விதிகளை மீறி கழிவுநீரை விட்டு வருகின்றன.
இது தொடர்பாக எழில்நகரைச் சேர்ந்த பொதுமக்கள் கூறிய தாவது:
இப்பகுதி முழுவதும் எப்போதும் கழிவுநீர் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் தொல்லை இங்கு தீராத பிரச்சினையாக உள்ளது. இரவில் கொசு விரட்டிகளோ, கொசு வலைகளோ இல்லாமல் தூங்கவே முடியாது. இர வில் குழந்தைகளுக்கு பால் ஆற்றினால் கூட அதில் கொசுக்கள் சிக்கி பாழாகும். முதல்வர் தொகுதியாக இருந்தபோதும் இதே நிலைதான் என்று தெரிவித்தனர்.
நீர்வழித் தடங்களில் கழிவுநீரை விட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்ட சென்னை குடிநீர் வாரியமே இச்செயலில் ஈடுபடுவது தொடர்பாக, அதன் தலைமை அலுவலகத்தில் கேட்டபோது, ``அந்த கழிவுநீரை முறையாக சுத்திகரிக்க ரூ.40 கோடியில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுநீர் விடுவது தடுக்கப்படும். மழைநீர் வடிகாலில் லாரிகள் மூலமாக கழிவுநீர் விடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
நீர்வழிப் பாதைகளில் கழிவுநீர் விடுவதை தடுக்காதது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ``சென்னை குடிநீர் வாரியத்துடன் பேசி, தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT