Published : 26 Sep 2023 04:02 PM
Last Updated : 26 Sep 2023 04:02 PM
சென்னை: “கருணாநிதி நூற்றாண்டையொட்டி மகளிர் அணி அக்டோபர் 14-ல் சென்னையில் நடத்தும் மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த மகளிர் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள் என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்துத் துறைகளிலும் பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், பெண்ணுரிமைக்காகவும் தலைவர் கருணாநிதி மகத்தான பணிகளை ஆற்றியுள்ளார். அவர்தான், அரசு வேலைவாய்ப்பிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு, ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்குச் சொத்துரிமை உள்ளிட்டவற்றை திமுக ஆட்சியில் முதல்வராக இருந்து சட்டமாக்கினார்.
தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் வாயிலாக, “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்”, “பெண்களுக்குக் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம்”, “புதுமைப் பெண் திட்டம்”, “மகளிர் சுய உதவிக் குழுக்கள்”, “மகளிரை அர்ச்சகராக்கியது” என, பெண்கள் முன்னேற்றத்துக்காகப் பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை அடுத்தடுத்துச் செயல்படுத்தி வருகிறார்.
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது திமுகவின் நீண்ட கால கோரிக்கை. அத்தகைய மகளிர் இடஒதுக்கீடு மசோதா, ஒன்றிய பாஜக அரசின் 9 ஆண்டுகால மறதிக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. ஆனால் அதுவும், மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக அமலுக்கு வர முடியாத நிலையில், 2029-ம் ஆண்டு வரும் எனத் தெரிவித்துள்ளனர். அதுவும் நிச்சயமற்றதாக உள்ளது.
எனவே, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமைத் தொடர்பான கருத்துரையாடலை முன்னெடுப்பதை காலத்தின் தேவையாகக் கருதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தலைமையில், கட்சியின் மகளிர் அணி சார்பில் வருகின்ற 14.10.2023 (சனிக்கிழமை) அன்று சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் ‘மகளிர் உரிமை மாநாடு’ பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்க திமுக தலைவர் வைத்த கோரிக்கையை ஏற்று, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தலைவர் கருணாநிதியால் “இந்திராவின் மருமகளே வருக” என வரவேற்கப்பட்டவருமான சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜா உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் பல்வேறு முக்கிய அகில இந்தியத் தலைவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.
பெண்ணுரிமைப் போற்றும் இந்த மாநாட்டில் கட்சியின் மகளிர் அணியைச் சார்ந்த அனைவரும், தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர் சகோதரிகளும் கலந்துகொள்ள வேண்டும் என அன்புடன் அழைக்கிறேன்” என்று என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT