Published : 26 Sep 2023 04:42 PM
Last Updated : 26 Sep 2023 04:42 PM
சென்னை: சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கை மீது முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், நிலைக் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும், தொழில் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் அடர்த்தியான மின் நுகர்வு நேர கூடுதல் கட்டணத்தை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும், மின் கட்டண பட்டி 3 ஏ 1 க்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, அரசின் கவனத்தை குறிப்பாக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக சிறு, குறு தொழில்துறை அமைச்சர், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசும் அரசின் அணுகுமுறை வரவேற்கத்தக்கது. இருப்பினும் தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு, பொருளாதார சுயசார்பு, பொருள் உற்பத்தி மற்றும் தயாரிப்பு போன்றவற்றில் பெரும் பங்களிக்கும் ஜவுளி, மின்பொருள் உற்பத்தி, எந்திரங்கள் தயாரிப்பு, உப பொருட்கள் தயாரிப்பு என பரந்த பட்ட அளவில் நடந்து வரும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மீதும், அதன் முதலீட்டாளர்களின் கோரிக்கைகள் மீதும் தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு பேசுவதும், தீர்வு காண்பதும் உடனடித் தேவையாகும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT