Published : 26 Sep 2023 04:36 PM
Last Updated : 26 Sep 2023 04:36 PM
சென்னை: ஆக்கிரமிப்பு, போக்குவரத்து நெரிசல் போன்ற பல்வேறு பிரச்சினைகளால் பெரம்பூர் நெடுஞ்சாலை திணறி வருகிறது. இதனால் வாகனங்கள் எறும்பை போல ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்லும் வகையில் இந்த நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை, பெரம்பூர் பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு இடையே குறுகிய சாலையாக பயணிக்கிறது பெரம்பூர் நெடுஞ்சாலை. ஒரு புறம் ஆக்கிரமிப்பு, மறுபுறம் ரயில் நிலையம் இருப்பதால், நடப்பதற்கான இடம் தெரியாமல் பாதசாரிகள் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையே போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில் ஒரு பேருந்து நின்றாலும், அடுத்தடுத்து மொத்தமாக அனைத்து வாகனங்களும் வழியிலேயே முடங்கும் அளவில் இருக்கிறது பெரம்பூர் நெடுஞ்சாலை. மாதவரம், திருவிக நகர், கொளத்தூர், வியாசர்பாடி என வடசென்னைக்குச் செல்வதற்கான முக்கிய சாலையில் இதுபோன்ற பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது.
மனு அளித்தால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாகவும், அடுத்த நாளே மீண்டும் நெரிசலில் சிக்குவதால் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக பெரம்பூர் சுற்றுவட்டார மேம்பாட்டுக் குழுவின் அமைப்பாளர் ரகுகுமார் சூடாமணி கூறியதாவது: நெடுஞ்சாலையில் ஏற்படும் நெரிசலுக்கு சாலை விரிவாக்கமும், ஆக்கிரமிப்பு அகற்றமுமே தீர்வாக இருக்க முடியும். இதுமட்டுமின்றி சில சீரமைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
குறிப்பாக பெரம்பூர் பேருந்து நிலையத்துக்கு அருகே ரயில் நிலைய வாயிலை மாற்றி அமைக்க வேண்டும். அப்போது இரு நிலையங்களுக்கு இடையேயும் பயணிகள் எளிதாக சென்று, வெவ்வேறு வகையிலான போக்கு வரத்தை பயன்படுத்த முடியும்.
அப்பகுதியில் சாலையும் சற்று அகலமாக உள்ளது. மேலும் மாற்றம் செய்யப்படும் ரயில்நிலைய வாயிலில் ஆட்டோ நிறுத்தத்தையும் ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் ஒருங்கிணைந்த பொதுப் போக்குவரத்தை பலபபடுத்த முடியும். அதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியும். ஆண்டர்சன் சாலையில் இருந்து வேகமாக வரும் வாகன ஓட்டிகள் சாலைத் தடுப்பு இருப்பது அறியாமல் மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
விபத்துகளில் உயிரிழப்புகளும் நேரிட்டுள்ளன. இதுமட்டுமின்றி ஆங்காங்கே சாலை தடுப்புகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கான எந்தவித எச்சரிக்கை பதாகைகளும் வைக்கப்படவில்லை. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் அண்மையில் வைக்கப்பட்ட சிக்னலும் 2 மாத காலத்துக்குள் பழுதாகி விட்டது. இதை சரி செய்து தருமாறுகோரிக்கை வைத்து வருகிறோம்.
மேலும், சாலைத் தடுப்பு இருப்பதை குறிக்கும் வகையில் வேகத்தடை அமைக்க வேண்டும். குறுகிய சாலையில் ஆக்கிரமிப்பு என்பது மிகப்பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. குறிப்பாக அனைத்து உணவகங்கள், இனிப்பு விற்பனையகங்களுக்கென வாகன நிறுத்தம் இல்லாததால், கடைகளின் வாயில்களின் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதுவே போக்குவரத்துக்கு பெரிய இடையூறாக இருக்கிறது. நோ பார்க்கிங் போர்டுக்கு கீழேயே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
இது ஒருபுறமிருக்க பேருந்து நிறுத்தங்களில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பேருந்துகளுக்கு இடையூறு ஏற்பட்டு, போக்குவரத்து முடங்குகிறது. இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். பெரம்பூர் பேருந்து நிலையத்தைச் சுற்றி ஏராளமான பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. குறிப்பாக பேருந்து நிலையத்தின் எதிரில், அருகில் என 2 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இவற்றை அகற்ற வேண்டும். தற்போது பேருந்து நிலைய முகப்பில் இருந்த நேரக்காப்பாளர், ஊழியர் ஓய்வறைகள் அகற்றப்பட்டு, நிலையத்தின் பக்கவாட்டில் கட்டப்பட்டுள்ளது.
எனவே, பேருந்து நிலைய முகப்பில் காலியாக உள்ள இடத்தில் ஒரு பாதை அமைத்து அனைத்து பேருந்துகளும், அந்தபாதை வழியே செல்ல ஏற்பாடு செய்யலாம். பேருந்து நிறுத்தங்கள் அகற்றப்படும்போது, கிடைக்கும் இடத்தின் மூலம்வாகனங்கள் நெரிசலின்றி செல்ல முடியும்.அதே நேரம், அப்பகுதிகள் மீண்டும் ஆக்கிரமிக்கப் படாதவாறு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியானது நெரிசல் மிகுந்து காணப்படுவதால் அங்குவசிக்கும் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். பெரம்பூர்நெடுஞ்சாலையின் அருகில் இருக்கும் அனைத்து தெருக்களும் குறுகலாக உள்ளன.
பல்வேறு பணிகளுக்காக பெரம்பூர் வந்து செல்வோர், வாகனங்களை தெருக்களில் நிறுத்துகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கான வாகன நிறுத்தங்களை அமைக்க வேண்டும். இங்கு மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்தோடு சாலை விரிவாக்கப் பணிகளையும் சேர்த்து முடிக்க மாநகராட்சி முயற்சி எடுக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கருத்துகளையும் கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.பெரம்பூர் நெடுஞ்சாலையில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை தொடர்பாக மாநகராட்சி உயரதிகாரிகள் கூறியதாவது: பெரம்பூர் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பை தொடர்ந்து அகற்றி வருகிறோம். அங்குள்ள கடைகளுக்கு வாகன நிறுத்தம் தொடர்பாக தொடர்ந்து அறிவுரை வழங்கி வருகிறோம். அதேநேரம், சாலை விரிவாக்கம் தொடர்பாக தற்போதைக்கு திட்டமிடவில்லை. இதுகுறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT